241. புனல் ஆடும் மகளிர் கதுமென குடைய - நீராடுமகளிர் கடுகக் குடைந்து விளையாட,;
242. கூனி குயத்தின் வாய் நெல் அரிந்து - வளைந்து நின்று அரிவாளின் வாயாலே நெல்லையறுத்து,;
நெல்லு மிகக்காய்த்துத் தரையிலே விழுதலின், வளைந்துநிற்க வேண்டுமென்றார்.;
243. சூடு கோடு ஆக பிறக்கி - சூட்டை மலையாக அடுக்கி,;
243 - 4. நாள் தொறும் குன்று என குவைஇய குன்றா குப்பை - நாடோறும் கடாவிட்டு மேருவென்னும்படி திரட்டின தொலையாத நெற்பொலி,;
245 - 8. [ கடுந்தெற்று மூடையி னிடங்கெடக் கிடக்குஞ், சாலி நெல்லின் சிறைகொள் வேலி, யாயிரம் விளையுட் டாகக், காவிரி புரக்கு நாடுகிழ வோனே :]
கடு தெற்று மூடையின் இடம் கெட கிடக்கும் - நெருங்கத்தெற்றின குதிரின்கண்ணே வெற்றிடம் இல்லையாம்படி கிடத்தற்குக்காரணமான,;
கடுந்தெற்றுமூடை - கோட்டையுமாம்.
சிறை கொள் வேலி ஆயிரம் சாலி நெல்லின் விளையுட்டாக - வரம்பு கட்டின வேலிநிலம் ஆயிரக்கலமாகிய செந்நெல்லின் விளையுட்டாக,
காவிரி புரக்கும் நாடு கிழவோன் - காவிரி பாதுகாக்கும் நாடு தனக்கே உரித்தாம் தன்மையுடையோன்.
வறனாகிய காலையும் (237) புனல் (240) ஒழுகிப் (239) புகுதொறும் (240) மகளிர் குடைந்து விளையாடக் (241) கூனி அரிந்து (242) பிறக்கிக் (243) குவைஇய குப்பை (244) கிடத்தற்குக்காரணமான (245) விளையுட்டாகக் (247) காவிரி புலக்குநாடு (248) என வினைமுடிக்க.;
பொருந (3), கோடியர் தலைவ, கொண்டதறிந (57) புகழ்மேம்படுந, (60) ஏழின்கிழவ (63), காடுறை கடவுட்கடன் கழிப்பியபின்றை (52) நெறிதிரிந்தொராஅது (58) ஆற்றெதிர்ப்படுதலும் நோற்றதன்பயனே (59), போற்றிக்கேண்மதி (60); நின்னிரும்பேரொக்கலொடு (61) பசி ஓரா அல்வேண்டின், நீடின்று (62) எழுமதி (63); யானும் (64) இன்மை தீர வந்தனென் (129); உருகெழு குருசிலாகிய (131) உருவப்பஃறே ரிளையோன் சிறுவன் (130), கரிகால்வளவன் (148), நாடுகிழவோன் (248), குருசில், அன்னோன் (231), தாணிழன்மருங்கிற் குறுகி (149) மன்னர் நடுங்கத்தோன்றி (232), வாழியெனத் (231) தொழுது முன்னிற்குவிராயின் (150), நாட்டொடு (170) வேழம் (172) தரவிடைத் தங்கலோவிலன் (173) எனக்கூட்டிவினை முடிவுசெய்க.