134
கைபுனை செப்பங் கடைந்த மார்பிற்
செய்பூங் கண்ணி செவிமுத றிருத்தி
55நோன்பகட் டுமண ரொழுகையொடு வந்த
மகாஅ ரன்ன மந்தி மடவோர்
நகாஅ ரன்ன நளிநீர் முத்தம்
வாள்வா யெருந்தின் வயிற்றகத் தடக்கித்
தோள்புற மறைக்கு நல்கூர் நுசுப்பி
60னுளரிய லைம்பா லுமட்டிய ரீன்ற
கிளர்பூட் புதல்வரொடு கிலுகிலி யாடுந்
தத்துநீர் வரைப்பிற் கொற்கைக் கோமான்
றென்புலங் காவலர் மருமா னொன்னார்
மண்மாறு கொண்ட மாலை வெண்குடைக்
65கண்ணார் கண்ணிக் கடுந்தேர்ச் செழியன்
றமிழ்நிலை பெற்ற தாங்கரு மரபின்
மகிழ்நனை மறுகின் மதுரையும் வறிதே யதாஅன்று

53. (பி-ம்.) ‘கைபுனை சேயங்கடைந்த'

55. உமணரொழுகை: "பெருங்கயிற் றொழுகை மருங்கிற் காப்பச், சில்பத வுணவின் கொள்ளை சாற்றிப், பல்லெருத் துமணர் பதிபோகு நெடுநெறி" (பெரும்பாண். 63 - 5)

56. மகாரன்னமந்தி: "கடும்பறைக் கோடியர் மகாஅ ரன்ன, நெடுங்கழைக் கொம்பர்க் கடுவ னுகளினும்" (மலைபடு. 236 - 7); "உச்சிக் கிவருங் கட்கின் கடுவன், வீழ்ந்த திங்களை விசும்புகொண் டேறுந், தெய்வ மகாரி னையுறத் தோன்றி" (பெருங். 1. 40 : 73-5); அகநா. 206 : 3-6.

57. (பி-ம்.) ‘நகாஅ வன்ன'
நகார்: "பறிமுறை நேர்ந்த நகாராகக் கண்டோர்க்கு" (கலித். 93 : 18)

57 - 62. கொற்கைமுத்து: "விளைந்துமுதிர்ந்த விழுமுத்தி, னிலங்குவளை யிருஞ்சேரிக், கட்கொண்டிக் குடிப்பாக்கத்து, நற் கொற்கையோர் நசைப்பொருந" (மதுரைக். 135-8); "பல்லரண் கடந்த பசும்பூட் பாண்டியன், மல்குநீர் வரைப்பிற் கொற்கை முன்றுறை, யூதை யீட்டிய வுயர்மண லடைகரை, யோத வெண்டிரை யுதைத்த முத்தம்" (தொல். களவு. சூ. 11, ந. மேற். "கண்ணே")

65."கண்ணார் கண்ணிக் கரிகால் வளவன் "(பொருந. 148)

66.தாங்கரு மரபின்: சிறுபாண்.127.

67. மதுரையும் வறிதே:சிலப். பதிகம், 12-20, அடியார். மேற்.