1 - திருமுருகாற்றுப்படை 120 | வயிரெழுந் திசைப்ப வால்வளை ஞரல வுரந்தலைக் கொண்ட வுருமிடி முரசமொடு பல்பொறி மஞ்ஞை வெல்கொடி யகவ விசும்பா றாக விரைசெலன் முன்னி யுலகம் புகழ்ந்த வோங்குயர் விழுச்சீ | 125 | ரலைவாய்ச் சேறலு நிலைஇய பண்பே யதாஅன்று |
120.வயிரும்வளையும் இணைத்துச் சொல்லப்படுதல்: "வயிரும் வளையு மார்ப்ப" (முல்லை. 92); "வளைநரல வயிரார்ப்ப" (மதுரைக். 185); பயிர்வளை யரவமொடு வயிரெடுத் தூதி" (பெருங். 1. 38 : 4): "சங்குங் கருங்கோடும் ....... ஆர்ப்ப", "வளைகள் வயிரியம்பும் வாட்டானை வேந்தே" (பு. வெ. 24, 207) 121. உருமிடி முரசம்: "முரசதிர்ந் தன்ன வின்குர லேற்றொடு, நிரைசெல னிவப்பிற் கொண்மூ" (குறிஞ்சிப். 49-50); "விண்ணதி ரிமிழிசை கடுப்பப் பண்ணமைத்துத், திண்வார் விசித்த முழவு", "மழையெதிர் படுகண் முழவுகண் ணிகுப்ப" (மலைபடு. 2-3, 532); "இன்னிசை முரசினிரங்கி .......... சென்மழை தழுவ" (நற். 197 : 10-12); "கடிப்பிகு முரசின் குழங்கி" (குறுந். 270 : 3); "படுமழை முரசினிரங்கி" (புறநா. 350 : 4); "இடிமுரசியம்ப", முரசதிர்பவைபோன் முழுங்கிடி பயிற்றி"; (பா:4 : 19, 22 : 4); "இடியுமிழ் முரசம்" (அகநா. 354 : 2, சீவக. 2900); "உருமி னிடிமுர சார்ப்ப" (முத்.) "கோல மார்முர சிடி யுமிழ் தழங்கென முழுங்க்" (சீவக. 2392); "இடியார் பணைதுவைப்ப" (பு. வெ. 121;) "முழங்கின முகிலென முரசமே" (தக்க.530). முருகனுக்கு மயிற்கொடியுமுரியது: "மணிநிற மஞ்ஞை யோங்கிய புட்கொடி" (பரி. 17 : 48), "பல்பொறி மஞ்ஞை வெல்கொடி யுயரிய" (அகநா. 149 : 15),"மணிமயி லுயரிய மாறா வென்றிப், பிணி முக வூர்தி யொண்செய் யோனும்" (புறநா.56 : 7-8).‘தேவசேனாபதியுடைய கொடிகளாகியமயில்கள்', ‘பிள்ளையாருடைய துவசவாகனமான தோகைமயில்கள்' (தக்க. 23, 114, உரை) "முருகக்கடவுளின்கொடி கோழிக் கொடியின்றோ வெனின் அவர் மயிற் கொடியையு முடையார்; ‘பல்பொறி ......... அகவ' திருமுருகாற்றுப்படை; மற்றும் புராணங்களிற் கண்டுகொள்க" (தக்க. 23, உரை). 124. "உலகந் திரியா வோங்குயர் விழுச்சீர்" (மணி. 1 : 1) 125. "வரைவயிறு கிழித்த நிழறிகழ் நெடுவேற், றிகழ்பூண் முருகன் றீம்புன லலைவாய்" (தொல். களவியல், சூ. 23, மேற். "பையுண்மாலை"); "திருமணி விளக்கி னலைவாய்ச், செருகு சேஎய்" (அகநா. 266 : 20-21); "வெண்டலைப் புணரி யலைக்குஞ் செந்தில்,
|