நறு வீ நாகமும் அகிலும் ஆரமும் (116) துறை ஆடும் மகளிர்க்கு தோள்புணை ஆகிய (117) பொரு புனல் தரூஉம் (118) இலங்கை (119) - நறிய பூக்களையுடைய சுரபுன்னையையும் அகிலையும் சந்தனத்தையும் குளிக்குந்துறையிலே புனலாடுமகளிருடைய தோள்களுக்குத் தெப்பமாகக் கரையைக் குத்துகின்ற நீர் தருமிலங்கை,
கருவொடு (119) போக்கரு மரபின் (118) இலங்கை (119) - 1கருப்பதித்த முகூர்த்தத்தாலே ஒருவராலும் அழித்தற்கரிய முறைமையினையுடைய இலங்கை,
தொல் மா இலங்கை பெயரிய (119) நல் மா இலங்கை (120)-பழையதாகிய பெருமையினையுடைய இலங்கையினது பெயரைப்பெற்ற நன்றாகிய பெருமையையுடைய இலங்கை,
மன்னருள்ளும் (120) ஓவியர் பெருமகன் (123) - அவ்விலங்கைக்குரிய அரசர் பலருள்ளும் ஓவியர்குடியிற் பிறந்தோன்,
களிறு தழும்பு இருந்த கழல் தயங்கு திருந்து அடி (123) - யானையைச் செலுத்துதலாலுளதாகிய தழும்புகிடந்த வீரக்கழல் கிடந்தசையும் பிறக்கிடாத அடியினையும்,
பிடி கணம் சிதறும் கை (124) - பிடித்திரளைப் பலர்க்குங் கொடுக்குங்கை,
பெயல் மழை தட கை (124) - பெய்தற்றொழிலையுடைய மழை போன்ற பயனையுடைய பெரிய கையினையுமுடைய,
பல் இயம் கோடியர் புரவலன் (125) - பல வாச்சியங்களையுடைய கூத்தரைப் புரத்தலை வல்லவன்,
பெரு இசை (125) நல்லியக்கோடனை நயந்த கொள்கையொடு (126) - பெரிய புகழையுடைய நல்லியக்கோடனைக் காண்டற்குவிரும்பிய கோட்பாட்டுடனே,
பெருமகன் (122) புரவலனாகிய (125) நல்லியக்கோடனென முடிக்க.
127. தாங்கரு மரபின் தன்னும் - பிறராற் பொறுத்தற்கரிய குடிப் பிறந்தோர்க்குரிய முறைமைகளையுடைய தன்னையும்,
127 - 8. தந்தை வான் பொரு நெடு வரை வளனும் பாடி - அவன் தந்தையுடைய தேவருலகத்தைத் தீண்டும் நெடியமலையிற் செல்வத்தையும் பாடி,
129. முன் நாள் சென்றனம் ஆக - நாலுபத்து நாளைக்கு முன்னே போனேமாக,
1கருப்பதித்த முகூர்த்தம் - இந்நகரை அமைக்கத் தொடங்கிய காலம்; "கருவைக்கு நெடுநகரை" (கம்ப. ஊர்தேடு. 232)