இந்நாள் - இற்றைநாள், 130. திறவா கண்ண சாய் செவி குருளை - விழியாத கண்ணையுடையவாகிய வளைந்த செவியினையுடைய குட்டி, "நாயே பன்றி புலிமுய னான்கு, மாயுங் காலைக் குருளை யென்ப" (தொல். மரபு. சூ. 8) 131. கறவா பால் முலை கவர்தல் நோனாது - பிறராற் கறக்கப்படாத பாலினையுடைய முலையையுண்ணுதலைத் தன்பசிமிகுதியாற் பொறுத்தலாற்றாது, 132. புனிறு நாய் குரைக்கும் புல்லென் அட்டில் - ஈன்றணிமையையுடைய நாய் கூப்பிடும் பொலிவழிந்த அடுக்களையில், 133. காழ் சோர் அட்டில் (132) - கழிகள் 1ஆக்கையற்று விழுகின்ற அட்டில், முது சுவர் கணம் சிதல் அரித்த அட்டில் (132) - பழைய சுவரிடத்தெழுந்த திரண்ட கறையான் தின்ற அட்டில், 134. [பூழி பூத்த புழற்கா ளாம்பி:] பூழி புழல் 2காளாம்பி பூத்த அட்டில் (132) - நனைந்தபுழுதி உட்பொய்யாகிய காளானைப் பூத்த அட்டில், 135 - 6. [ஒல்குபசி யுழந்த வொடுங்குநுண்மருங்குல், வளைக்கைக் கிணைமகள்:] ஒடுங்கு பசி உழந்த ஒல்கு நுண் மருங்குல் வளைகை கிணைமகள் - ஒடுங்குதற்குக் காரணமான பசியாலே வருந்தி நுடங்கும் நுண்ணிய இடையினையும் வளையலையணிந்த கையினையுமுடைய 3கிணைவனுடைய மகள், 136 - 7. வள் உகிர் குறைந்த குப்பை வேளை உப்பிலி வெந்ததை - பெரிய உகிராற்கிள்ளின குப்பையினின்ற வேளை உப்பின்றாய் அட்டிலிலே (132) வெந்ததனை, 138 - 9. மடவோர் காட்சி நாணி கடை அடைத்து இரு பெரு ஒக்கலொடு ஒருங்கு உடன் மிசையும் - வறுமையுறுதலும் இயல்பென்றறியாது புறங்கூறுவோர் காண்டற்கு நாணித் தலைவாசலையடைத்து
1 ஆக்கை - கழிகளைக் கட்டும் கயிறு முதலியன; "கால்கொடுத்தெலும்பு முட்டிக் கவினரம் பாக்கை யாத்துத், தோலுடுத் துதிர மட்டித் தொகுமயிர் வேய்ந்த கூரை" (திருநா. திருக்கொண்டீச்சுரம்); "நரம்பாலாக்கையிட்டுத் தசைகொண்டு வேய்ந்த வகம்" (கந்தரலங்.) 2"ஆடுநனி மறந்த கோடுய ரடுப்பி, னாம்பி பூப்ப" (புறநா. 164 : 1 - 2); "சாம்பல்கண் டறியா வாம்பி பூத்த, வெலிதுயி லடுப்பு" (காசிக். 57) 3கிணைவன் மகள் - கிணைப்பறை கொட்டுவோனுடைய மனைவி: மகள் - மனைவி; மணி. 21 : 30.
|