மிடியாற் கரிய பெரிய சுற்றத்தோடே கூடவிருந்து அடையத்தின்னும், 140. 1அழி பசி வருத்தம் வீட - அறிவுமுதலியன அழிதற்குக் காரணமான பசியாலுளதாகிய வருத்தங்கள் விட்டுப்போம்படி, 140 - 43. பொழி கவுள் தறுகண் பூட்கை மணி தயங்கும் மருங்கின் சிறு கண் யானையொடு பெரு தேர் எய்தி யாம் அவண் நின்றும் வருதும் - மதம் வீழ்கின்ற கதுப்பினையும் கடுகக்கொல்லுதலாகிய மேற்கோளினையும் மணியசையும் பக்கத்தினையும் சிறிய கண்ணையுமுடைய யானையுடனே பெரியதேரையும் பெற்று யாம் அவ்விடத்துநின்றும் வாரா நின்றேம், தும் நிகழ்காலத்து வருதல், "உம்மொடு வரூஉங் கடதற" (தொல். வினை. சூ. 5) என்புழிக் கூறினாம். 143 - 5. நீயிரும் நயந்து இவண் இருந்த இரு பெரு ஒக்கல் செம்மல் உள்ளமொடு செல்குவிர் ஆயின் - நீங்களும் மூவேந்தர்பாற்பெறும் பரிசிலை, விரும்பி இவ்விடத்திருந்த வறுமையாற் கரியவாகிய பெரிய சுற்றத்தினது தலைமையை யுடைத்தாகிய நெஞ்சுடனே அவனிடத்தே போவீராயின், 146 - 50. [அலைநீர்த் தாழை யன்னம் பூப்பவும், தலைநாட் செருந்தி தமனிய மருட்டவும், கடுஞ்சூன் முண்டகங் கதிர்மணி கழாஅலவும், நெடுங்காற் புன்னை நித்திலம் வைப்பவும், கானல் வெண்மணல் கடலுலாய் நிமிர்தர:] கடல் உலாய் நிமிர்தர (150) அலை நீர் (146) கானல் வெள் மணல் (150)-கடல் பரந்து எற்றிப் பொருதலாலே அலையுநீரையுடைய கரையில் வெள்ளிய மணலிடத்து நின்ற,
1"அற்றா ரழிபசி தீர்த்தல்" (குறள், 226) என்பதில், ‘அழிபசி' என்பதற்கு உரையில் மிக்க பசி யென்றும், அதன் விசேட வுரையில், ‘எல்லா நன்மைகளும் அழிய வருதலின் அழிபசி யென்றார்' என்றும் பரிமேலழகர் எழுதியிருந்தல் இங்கே அறிதற்குரியது - பசி, அறிவு முதலியவற்றை அழிக்குமென்பதை, "அறிவுகெட நின்ற நல்கூர்மையே" (புறநா. 266 : 13), "தொல்வரவுந் தோலுங் கெடுக்குந் தொகையாக, நல்குர வென்னு நசை" (குறள், 1043), "குடிப்பிறப் பழிக்கும் விழுப்பங் கொல்லும், பிடித்த கல்விப் பெரும்புணை விடூஉம், நாணணி களையு மாணெழில் சிதைக்கும்..........பசிப்பிணி யென்னும் பாவி" (மணி. 11 : 76 - 80), "மானங் குலங்கல்வி வண்மை யறிவுடைமை, தானந் தவமுயர்ச்சி தாளாண்மை - தேனின், கசிவந்த சொல்லியர்மேற் காமுறுதல் பத்தும், பசிவந் திடப்போம் பறந்து" (நல்வழி) என்பவற்றால் உணர்க.
|