155. வீங்கு திரை கொணர்ந்த விரை மரம் விறகின் - மிகுகின்ற திரை கொண்டுவந்த மணத்தையுடைய அகிலாகிய விறகாலே, 156. கரு புகை செ தீ மாட்டி - கரிய புகையையுடைய சிவந்த நெருப்பை யெரித்து, 156 - 8. பெருதோள் மதி 1ஏக்கறூஉம் மாசு அறு திரு முகத்து நுதி வேல் நோக்கின் நுளைமகள் அரித்த - பெரிய தோளினையும் மதி இத்தன்மை பெற்றிலேமேயென்று விரும்புதற்குக் காரணமான மறுவறுகின்ற அமைதியினையுடைய முகத்தினையும் முனையினையுடைத்தாகிய வேல்போலும், பார்வையினையுமுடைய நுளைச்சாதியிற் பிறந்த மகளாலே அரிக்கப்பட்ட, 159. பழ படு தேறல் பரதவர் மடுப்ப - பழையதாகிய களிப்புமிகுகின்ற கட்டெளிவைப் பரதவர் எடுந்துவந்து வாயிடத்தே வைக்க, 160 - 61. கிளை மலர் படப்பை கிடங்கில் கோமான் தளை அவிழ் தெரியல் தகையோன் பாடி - கொத்திலெழுந்த பூக்களையுடையவாகிய தோட்டங்களையுடைய கிடங்கிலென்னும் ஊர்க்கு அரசனாகிய அரும்பு நெகிழ்ந்த மாலையினையுடைய அழகையுடையோனைப் பாடி, 162. அறல் குழல் பாணி தூங்கியவரொடு - தாளவறுதியையுடைய குழலோசையின் தாளத்திற்கொப்ப ஆடின மகளிரோடே, 163. வறல் குழல் சூட்டின் - உலர்தலையுடைய குழல்மீனைச் சுட்டதனோடே, வயின் வயின் பெறுகுவிர் - மனைதோறும் மனைதோறும் பெறுகுவிர்; பட்டினம் படரிற் (153) கிடங்கிற்கோமானாகிய (160) தகையோனைப் பாடி (161) ஆடினமகளிரோடே (162) நீங்களும் சூட்டோடே (163) தேறலைப் பரதவர் மடுப்ப (159) அவற்றை வயின்வயிற் பெறுகுவிரென முடிக்க. 164. பைநனை அவரை பவழம் கோப்பவும் - பசுத்த அரும்புகளையுடைய அவரை பவழம்போலப் பூக்களை முறையே தொடாநிற்கவும், 165. கரு நனை காயா கணம் மயில் அவிழவும் - கரிய அரும்பினையுடைய காயாக்கள் திரண்ட மயிலின் கழுத்துப்போலப் பூவாநிற்கவும், 166. கொழு கொடி முசுண்டை கொட்டம் கொள்ளவும் - கொழுவிய கொடியினையுடைய முசுட்டை கொட்டம் போலும் பூவைத் தன்னிடத்தே கொள்ளா நிற்கவும், 2 கொட்டை: நூற்கின்ற கொட்டையுமாம்.
1 "கடைக்க ணேக்கற" (சீவக.1622) 2 கொட்டையென்று பாடங்கொண்டு அதற்கெழுதிய குறிப்பாக இதனைக் கொள்ளவேண்டுமென்று தோற்றுகிறது.
|