166

167. செழு குலை காந்தள் கைவிரல் பூப்பவும் - வளவிய குலையினையுடைய காந்தள் கைவிரல்போலப் பூவாநிற்கவும்,

168. கொல்லை நெடு வழி கோபம் ஊரவும் - கொல்லையிடத்து நெடிய வழிகளிலே இந்திரகோபம் ஊராநிற்கவும்,

இச் செயவெனெச்சமெல்லாம் ‘ஈண்டு நிகழ்கால முணர்த்தியே நின்றன; ஞாயிறுபட வந்தானென்றாற்போல.

169. முல்லை சான்ற 1முல்லை அம் புறவின் - இவைகாலமுணர்த்தி இங்ஙனம் நிகழ்த்தாநிற்கவும், கணவன்கூறிய சொற்பிழையாது இல்லிருந்து நல்லறஞ்செய்து ஆற்றியிருந்த தன்மையமைந்த முல்லைக் கொடி படர்ந்த அழகினையுடைய காட்டிடத்து,

இது, "மாயோன் மேய" (தொல். அகத். சூ. 5) என்னும் சூத்திரத்தானுணர்க.

170 - 71. விடர் கால் அருவி வியல் மலை சுடர் மூழ்கி கான்மாறிய செவ்விநோக்கி - முழைஞ்சுகளிலே குதிக்கும் அருவியினையுடைய பெரிய அத்தகிரியிலே ஞாயிறுமறைந்து அவன் கிரணங்கள்போன அந்திக் காலத்தைப் பார்த்து,

172 - 3. [திறல்வே னுதியிற் பூத்த கேணி, விறல்வேல் வென்றி வேலூ ரெய்தின்:] திறல் வேல் நுதியின் கேணி பூத்த விறல் வேல் வென்றி வேலூர் எய்தின் - முருகன்கையில் வலியினையுடைத்தாகிய வேலின் நுதிபோலே கேணி பூக்கப்பட்ட வெற்றியையுடைய வேலாலே வெற்றியையுடைய வேலூரைச் சேரின்,

என்றது: நல்லியக்கோடன் தன்பகைமிகுதிக்கு அஞ்சி முருகனை வழிபட்டவழி அவன் இக்கேணியிற் பூவைவாங்கிப் பகைவரை எறியென்று கனவிற்கூறி அதிற் பூவைத் தன் வேலாக நிருமித்ததொரு கதை கூறிற்று. இதனானே வேலூரென்று பெயராயிற்று.

174. உறு வெயிற்கு உலைஇய உருப்பு அவிர் குரம்பை - மிகுகின்ற வெயிலுக்கு உள்ளுறைகின்றோர் வருந்தப்பட்ட வெப்பம் விளங்குகின்ற குடிலிலிருக்கின்ற,


1 "முல்லை சான்ற புறவு-இருத்தலாகிய உரிப்பொருளமைந்த காடு" (மதுரைக். 285, ந.) என்றும், முல்லைப்பாட்டின் முதலில், "இல்லற நிகழ்த்துதற்குப் பிரிந்து வருந்துணையும் ஆற்றியிருவென்று கணவன் கூறிய சொல்லைப் பிழையாமல் ஆற்றியிருந்து இல்லறம் நிகழ்த்திய இயற்கை முல்லையாமென்று கருதி இருத்தலென்னும் பொருடர முல்லை யென்று இச்செய்யுட்கு நப்பூதனார் பெயர் கூறினமையிற் கணவன் வருந்துணையும் ஆற்றியிருந்தாளாகப் பொருள் கூறலே அவர் கருத்தாயிற்று" என்றும் நச்சினார்க்கினியர் எழுதியிருத்தல் காண்க.