167

175. எயிற்றியர் அட்ட இன் புளி வெ சோறு - எயினக்குலத்தின் மகளிராலே அடப்பட்ட இனிய 1 புளிங்கறியிடப்பட்ட வெவ்விய சோற்றை,

புளி: தித்திப்புமாம்.

176. தேமா மேனி சில் வளை ஆயமொடு - தேமாவின் தளிர் போலும் மேனியையும் 2 சிலவாகிய வளையினையுமுடைய நும்மகளிருடைய திரளுடனே,

177. ஆமான் சூட்டின் - ஆமானினது சூட்டிறைச்சியை யுடைய,

அமைவர பெறுகுவிர் - பசிகெடப் பெறுகுவிர்;

வேலூரெய்திற் (173) சூட்டினையுடைய (177) சோற்றை (175) ஆயத்தோடே (176) அமைவரப் பெறுகுவிரென முடிக்க.

முல்லையும் குறிஞ்சியும் சேர்ந்திருத்தலிற் சேரக்கூறினர், 3 இரண்டுங்கூடி யல்லது பாலைத்தன்மை பிறவாமையின்.

178 - 9. [நறும்பூங் கோதை தொடுத்த நாட்சினைக், குறுங்காற் காஞ்சிக் கொம்ப ரேறி:] நாள் கோதை தொடுத்த நறு பூ சினை குறுகால் காஞ்சி கொம்பர் ஏறி - நாட்காலத்தே மாலைகட்டினாற்போல இடையறா மற் றொடுத்த நறிய பூக்களையுடைய சிறிய கொம்புகளையும் குறிய தாளினையுமுடைய காஞ்சிமரத்தின் பெரிய கொம்பரிலேயேறி,

180. நிலை அரு குட்டம் நோக்கி நெடிது இருந்து - ஒரு காலத்தும் நிலைப்படுதல் அரிதாகிய ஆழத்திற்றிரிகின்ற மீன்களை எடுக்குங் காலத்தைக் கருதி நெடும்பொழுதிருந்து,

181 - 2. புலவு கயல் எடுத்த பொன் வாய் மணி சிரல் வள் உகிர் கிழித்த வடு ஆழ் பசு அடை - புலானாற்றத்தையுடைய கயலை முழுகி யெடுத்த பொன்னிறம்போலும் வாயையுடைய நீலமணிபோன்ற சிச்சிலியினது பெரிய உகிர்கிழித்த வடுவழுந்தின பசிய இலையினையுடைய,

183. முள் அரை தாமரை முகிழ் விரி நாள் போது-முள்ளையுடைத் தாகிய தண்டினையுடைய வெண்டாமரையினது அரும்புவிரிந்த நாட்காலத்திற் பூவை,


1 புளி - புளிங்கறி: "புளியுஞ் சோறுமென் புந்தியிற் செந்தமிழ், தெளியும் போதெலாந் தித்தியா நிற்குமே" (தமிழ்நா.)

2 "சில்வளை விறலி யென்றது பல்வளையிடுவது பெதும்பைப் பருவத்தாகலின், அஃதன்றிச் சில்வளையிடும் பருவத்தாளென அவள் ஆடல் முதலிய துறைக்குரியளாதல் கூறிற்று" (பதிற். 57 : 6, உரை)

3 "முல்லையுங் குறிஞ்சியு முறைமையிற் றிரிந்து, நல்லியல் பிழந்து நடுங்குதுய ருறுத்துப், பாலை யென்பதோர் படிவங் கொள்ளும்" (சிலப். காடுகாண். 64 - 6)