168

184. கொங்கு கவர் நீலம் செ கண் சேவல் - தேனை நுகர்கின்ற நீல நிறத்தினையும் சிவந்த கண்ணினையுமுடைய வண்டொழுங்கு,

பூவைத் தேனையென்றது, 1 "தெள்ளிது" என்றதனாள் முடிக்க.

185. மதி சேர் அரவின் மான தோன்றும் - திங்களைச் சேர்கின்ற கரும்பாம்பை யொப்பத் தோன்றும்,

186. மருதம் சான்ற மருதம் தண் பணை - ஊடியுங்கூடியும் போகம் நுகருந் தன்மை யமைந்த மருதநிலத்திற் குளிர்ந்த வயலிடத்து,

187 - 8. [அந்தண ரருகா வருங்கடி வியனக, ரந்தண் கிடங்கினவனாமூ ரெய்தின்:] அம் தண் கிடங்கின் அரு கடி வியன் நகர் அந்தணர் அருகா அவன் ஆமூர் எய்தின் - அழகினையுடைய குளிர்ந்த கிடங்கினையும் அரிய காவலையும் அகற்சியையுடைய அகங்களையுமுடைய அந்தணர் சுருங்காத அவனுடைய ஆமூரைச் சேர்வீராயின்,

189 - 90. [வலம்பட நடக்கும் வலிபுண ரெருத்தி, னுரன்கெழு நோன்பகட் டுழவர் தங்கை:] வலி புணர் எருத்தின் வலம் பட நடக்கும் நோன் பகடு உரன்கெழும் உழவர் தங்கை - இழுத்தற்குரிய வலிபொருந்தின கழுத்தினாலே வெற்றியுண்டாக நடக்கும் மெய்வலியினையுடைத்தாகிய எருத்தினையுடைய அறிவுபொருந்தின உழவருடைய தங்கையாகிய,

உரன் - அறிவு; "உரவோ ரெண்ணினு மடவோ ரெண்ணினும்" (பதிற். 73 : 1) என்றாற்போல.

191 - 2. பிடி கை அன்ன பின்னு வீழ் சிறு புறத்து தொடி கை மகடூஉ- பிடியினது கையை யொத்த பின்னினமயிர் வீழ்ந்து கிடக்கின்ற சிறிய முதுகினையும் தொடியணிந்த கையினையுமுடைய மகள்.

192. மக முறை தடுப்ப - உழவர் தங்கையாகிய (190) மகடூஉ (192) தான் உள்ளே யிருந்து தன் பிள்ளைகளைக்கொண்டு நும்மை அடையவே எல்லாரையும் போகாது விலக்குகையினாலே,

இனிபிள்ளைகளை உபசரிக்குமாறுபோல உபசரித்து விலக்கவென்றுமாம்.

193 - 4. இரு காழ் உலக்கை இரும்பு முகம் தோய்ந்த அவைப்பு மாண் அரிசி அமலை வெள் சோறு - கரிய வயிரத்தையுடைய உலக்கையினது பூணினையுடைய முகத்தைத் தேயப்பண்ணின குற்றுதல் மாட்சிமைப்பட்ட அரிசியாலாக்கின கட்டியாகிய வெள்ளியசோற்றை,

195. கவை தாள் அலவன் கலவையொடு பெறுகுவிர் - கவைத்த காலினையுடைய ஞெண்டும் பீர்க்கங்காயுங்கலந்த கலப்புடனே பெறுகுவிர்;


1 "முதன்மு னைவரிற் கண்ணென் வேற்றுமை, சினைமுன் வருத றெள்ளி தென்ப" (தொல். வேற்றுமைமயங்கு. சூ. 5)