169

தண்பணையின் (186) ஆமூரெய்தின் (188) உழவர் தங்கையாகிய (180) மகடூஉத் தடுக்கையினாலே (192) சோற்றைக் (194) கலவையொடு பெறுகுவிரெனமுடிக்க.

196 - 201. [எரிமறிந் தன்ன நாவி னிலங்கெயிற்றுக், கருமறிக் காதிற் கவையடிப் பேய்மக, ணிணனுண்டு சிரித்த தோற்றம் போலப், பிணனுகைத்துச் சிவந்த பேருகிர்ப் பணைத்தா, ளண்ணல் யானை யரு விதுக ளவிப்ப, நீறடங்கு தெருவினவன் சாறயர் மூதூர்:]

எரி மறிந்தன்ன நாவின் (196) - மேனோக்கியெரிகின்ற நெருப்புச் சாய்ந்தாலொத்த நாவினையும்,

கரு மறி காதின் (197) - வெள்யாட்டுமறிகளை அணிந்த காதினையும்,

கவை அடி பேய் மகள் (197)- கவைத்த அடியினையுமுடைய பேய் மகள்,

நிணன் உண்டு சிரித்த (198) இலங்கு எயிறு (196) தோற்றம் போல (198) - நிணத்தைத் தின்று சிரித்த விளங்குகின்ற எயிற்றினது தோற்றரவு போல,

பிணன் உகைத்து சிவந்த பெரு உகிர் பணை தாள் (199) அண்ணல் யானை அருவி துகள் அவிப்ப (200) நீறு அடங்கு தெருவின் ஊர் (201) - தாம் கொன்ற பிணங்களின் தலைகளைக் காலாலே தள்ளிச் சிவந்த பெரிய உகிரினையும் பெருமையையுடைய கால்களையுமுடைய தலைமையை யுடையவாகிய யானைகளின் மதவருவி எழுந்த துகளை அவிக்கையினாலே புழுதியடங்கின தெருவினையுடைய ஊர்,

அவன் சாறு அயர் மூதூர் (201)- அவனுடைய விழா நடக்கின்ற பழைய ஊர்,

202. சேய்த்தும் அன்று சிறிது நணியதுவே - தூரிய இடத்தது மன்று; சிறிதாக அண்ணிய இடத்ததே;

மூதூர் நணியதென்க.

203 - 6. [பொருநர்க் காயினும் புலவர்க் காயினு, மருமறை நாவினந்தணர்க் காயினுங், கடவுண் மால்வரை கண்விடுத் தன்ன, வடையா வாயிலவ னருங்கடை குறுகி;]

பொருநர்க்கு அடையா ஆயினும் புலவர்க்கு அடையா ஆயினும் அருமறை நாவின் அந்தணர்க்கு அடைய ஆயினும் அரு கடை வாயில் குறுகி - கிணைப் பொருநர்க்கு அடைக்கப்படாவாயினும், அறிவுடையோர்க்கு அடைக்கப்படாவாயினும், அரியவேதத்தை யுடைத்தாகிய நாவினையுடைய அந்தணர்க்கு அடைக்கப்படாவாயினும் ஏனையோர்க்கு உள்ளே சேறற்கரிய தலைவாயிலையணுகி, அடையாவென்ற பன்மை நான்குவாயிலையுங்கருதியது.