188
கொடுவி லெயினக் குறும்பிற் சேப்பிற்
130களர்வள ரீந்தின் காழ்கண் டன்ன
சுவல்விளை நெல்லின் செவ்வவிழ்ச் சொன்றி
ஞமலி தந்த மனவுச்சூ லுடும்பின்
வரைகால் யாத்தது வயின்றொறும் பெருகுவிர்
யானை தாக்கினு மரவுமேற் செலினு
135நீனிற விசும்பின் வல்லேறு சிலைப்பினுஞ்
சூன்மகண் மாறா மறம்பூண் வாழ்க்கை
வலிக்கூட் டுணவின் வாட்குடிப் பிறந்த
புலிப்போத் தன்ன புல்லணற் காளை
சென்னா யன்ன கருவிற் சுற்றமொடு
140கேளா மன்னர் கடிபுலம் புக்கு
நாளா தந்து நறவுநொடை தொலைச்சி


129. (பி-ம்.) ‘எயினர் குறும்பிற்'

132. "மனாவனைய மென்சூன் மடவுடும்பு" (சீவக. 278)ஙமலி-திசைச்சொல்; தொல், மொழி. சூ. 31, ந. இ - வி. சூ.27, மேற்.

135. நீனிற விசும்பு: முருகு. 116-ஆம் அடியின் குறிப்புரையைப் பார்க்க.

134 - 6. அணங்கும் விலங்கும் பொருளாக அச்சம் பிறத்தல் இயல்பென்பதற்கு இவ்வடி மேற்கோள்; தொல். மெய் . சூ. 8, பேர்.

138. (பி-ம்.) ‘அணர்க்காளை' வீரனுக்குப் புலிப்போத்து உவமை: "உறுபுலித் துப்பி னோவியர் பெருமகன்"(சிறுபாண். 122); "புலிக்கணமும்.....போல்வார்", "குயவரி வேங்கை யனைய-வயவர்", "இனவேங்கை யன்ன விகல் வெய்யோர்"(பு. வெ. 25, 58, 63); "வயப்புலிப் போத்தன்னார்" (பெரிய. ஏனாதி. 13) புலிப்போத்து, "பொறிவரி யிரும்புலிப் போத்துநனி வெரீஇ."(பெருங்.1. 54 : 37); "புலிப்போத்துக் கொடி" (தக்க. 4, 8, உரை)

புல்லணற்காளை: "மையணற் காளை, " (ஐங். 389 ; புறநா. 83 : 1. பு. வெ. 12) போத்தென்னும் பெயர் இளமைக்கும் ஆண்பாற்கும் முறையேயுரித்து; தொல். மரபு சூ. 24, 41 பேர், மேற்.

139. (பி-ம்.) ‘செந்நாய்'

141. (பி-ம்) நாளா: "தாளித் தண்பவர் நாளா மேயும்" (குறுந். 104 : 3)