16. இடம் வயின் தழீஇ-இடத்தோட்பக்கத்தே அணைத்து, 17. வெ தெறல் கனலியொடு மதி வலம் திரிதரும்- வெய்ய தெறு தற்றொழிலையுடைய ஞாயிற்றேடே திங்களும் 1மேருவை வலமாகத் திரிதலைச் செய்யும், 18. தண் கடல் வரைப்பில் தாங்குநர் பெறாது- குளிர்ந்த கடல் சூழ்ந்த உலகில் நின்னைப் புரப்பாரைப் பெறாமல், 19. பொழி மழை துறந்தபுகை வேய் குன்றத்து-பெய்கின்ற மழை துறத்தலால் நிலத்தின் கண்ணெழுந்த ஆவிசூழ்ந்த மலையிடத்தே, 20. பழு மரம் தேரும் பறவை போல - 2பழுத்த மரத்தைத் தேடித்திரியும் பறவைகளைப்போல, 21. கல்லென் சுற்றமொடு கால் கிளர்ந்து திரிதரும்-பசிமிகுதியால் அழுகின்ற சுற்றத்தாருடனே ஓரிடத்திராமற் பயனின்று ஓடித் திரிதலைச் செய்யும், 22. புல்லென் யாக்கை புலவு வாய் பாண- பொலிவழிந்த வடிவினையும் கற்ற 3கல்வியை வெறுத்துக் கூறுகின்ற வாயினையுமுடையபாண, "சில்செவித் தாகிய கேள்வி நொந்து" (புறநா. 68:3) என்றார் பிறரும்; புலால் நாறுகின்ற வாயுமாம். கேள்வியைத் தழீஇத்(16)தாங்குநர்ப் பெறாது(18)குன்றத்தே(19) கடுந்திறல் வேனிற்காலத்தே(13)பறவைபோலத்(20) திரிதரும்(21) பாணவென முடிக்க. 23-4. பெரு வறம் கூர்ந்த கானம் கல்லென கருவி வானம் துளி சொரிந்தாங்கு - பெரிய வற்கடமிக்க (பி-ம். 'வறட்காலமிக்க')
1. "ஏர்பு வலன் திரிதரு-எழுந்து மகாமேருவை வலமாகத் திரிதலைச் செய்யும்" (முருகு.1,ந.) 2. பறவைகள்-வௌவால்;"மரம் பழுத்தால் வௌவாலை வாவென்று கூவி, இரந்தழைப்பார் யாவருமங் கில்லை" (ஒளவையார்) 3. வறுமையினாற் கல்வியை வெறுத்துக் கூறுதலுக்கு, "அடகெடு வாய் பலதொழிலு மிருக்கக் கல்வி யதிகமென்றே கற்றுவிட்டோ மறிவில் லாமல், திடமுடன்மோ கனமாடக் கழைக்கூத் தாடச் செப்பிடுவித் தைகளாடத் தெரிந்தோ மில்லை, தடநகில்வே சையராகப் பிறந்தோ மில்லை சனியான தமிழைவிட்டுத் தைய லார்தம், இடமிருந்து தூதுசென்று பிழைத்தோ மில்லை யென்னசென்ம மெடுத்துலகி லிரக்கின் றோமே" (தனிப்,) என்னும் பாடலும் இதுபோன்ற பிறவும் சான்றாகும்.
|