213

காடு உழவுத்தொழில் முதலியவற்றால் ஆரவாரமிகும்படி தொகுதியையுடைய மேகம் துளியைச் சொரிந்தாற் போல,

25-6. பழ பசி கூர்ந்த எம் இரு பெரு ஒக்கலொடு வழங்க தாவஅ பெரு வளன் எய்தி-தொன்றுதொட்ட பசிமிக்க எம்முடைய கரிய பெரிய சுற்றத்தோடே யாங்கள் பிறர்க்குக் கொடுக்கவும் மாளாத பெரிய செல்வத்தைப் பெற்று,

27-8. வால் உளை புரவியோடு வய களிறு முகந்து கொண்டு யாம் அவணின்றும் வருதும்-வெள்ளிய தலையாட்டத்தையுடைய குதிரையோடே வலியினையுடைய யானைகைளையும் வாரிக்கொண்டு யாம் அவனூரின்றும் வாராநின்றேம்;

28. நீயிரும்-நீங்களும்,

29-37. [இருநிலங் கடந்த திருமறு மார்பின், முந்நீர் வண்ணன் பிறங்கடை யந்நீர்த், திரைதரு மரபி னுரவோ னும்பல், மலர்தலை யுலகத்து மன்னுயிர் காக்கும் முரசுமுழங்கு தானை மூவருள்ளும், இலங்குநீர்ப் பரப்பின் வளைமீக் கூறும், வலம்புரி யன்ன வசை நீங்கு சிறப்பின், அல்லது கடிந்த வறம்புரி செங்கோற், பல்வேற் றிரையற் படர்குவி ராயின்:]

மலர் தலை உலகத்து மன் உயிர் காக்கும் (32) முரசு முழங்கு தானை மூவருள்ளும் (33) - அகன்ற இடத்தையுடைய உலகத்தில் நிலைபெற்ற உயிர்களைப் புரக்கும் முரசு முழங்குகின்ற நாற்படையினையுமுடைய சேர, சோழ, பாண்டியரென்னும் மூவரிலும்,

இலக்குநீர் பரப்பின் வளை மீகூறும் (34) வலம்புரி அன்ன வசை நீங்கு சிறப்பின் (35)- விளங்குகின்ற நீரையுடைய கடலிடத்துப் பிறந்த சங்கில் மேலாக உலகம்கூறும் வலம்புரிச்சங்கையொத்த குற்ற நீங்கும் தலைமையினையும்,

அல்லது கடிந்த அறம் புரி செகோல்(36) - மறத்தைப்போக்கின அறத்தை விரும்பின செங்கோலினையுமுடைய,

இருநிலம் கடந்த திரு மறுமார்பின் (29) முந்நீர் வண்ணன் பிறங்கடை (30) உரவோன் உம்பல்(31) -பெரிய நிலத்தையளந்த திருவாகிய மறுவையணிந்த மார்பினையுடைய கடல்போலும்நிறத்தையுடையவன் பின்னிடத்தோனாகிய சோழன் குடியிற்பிறந்தோன்.

மூவருள்ளும்(33) சிறப்பினையும்(35)செங்கோலினையுமுடைய(36) உரவோ னென்க.

திருமால் குடியில்தோன்றிய உரவோன்.

அந்நீர்(30) திரை தரு மரபின் (31)பல்வேல் திரையன் (37)-அக்கடலின் திரை கொண்டுவந்த ஏறவிட்ட மரபாற் பலவேற்படையினையுடைய திரையனென்னும் பெயரைஉடையவன்,