அந்த இரண்டு மரத்திலும் கால்களை நட்டுக் குடிலாகக் கட்டி வசம்பு முதலியவற்றைக் கயிற்றாலே கோத்த பாயெடுத்தலைக் கூறினார். உருளியையும் (47) பாரையுமுடைய (48)சகட மென்க. 51-2. வேழம் காவலர் குரம்பை ஏய்ப்ப கோழி சேக்கும் கூடு உடை புதவின்-யானையைப் புனத்தில் தின்னாமல் காக்கின்ற தொழிலை யுடையார் இதண்மேலே கட்டின குடிலையொப்பச் சிறுகக்கட்டின கோழி கிடக்கும் கூட்டையுடைய தாகிய குடிலின் வாசலிலே, 53 - 4. முளை எயிறு இரு பிடி முழந்தாள் ஏய்க்கும் துளை அரை சிறு உரல் தூங்க தூக்கி - மூங்கில் முளை போலும் கொம்பினையுடைய கரியபிடியினது முழந்தாளை யொக்கும் துளையைத் தன்னிடத்தேயுடைய சிறிய உரலை அசையும்படி தூக்கி, கோத்து நாற்றுதற்குத் துளையிடுதலின், ‘துளையரைச் சீறுரல்' என்றார். 55-6. நாடகம் மகளிர் ஆடு களத்து எடுத்த விசி வீங்கு இன் இயம்கடுப்ப-நாடகமாடு மகளிர் ஆடும்களத்தே கொண்டு வந்த வாரால் பிணித்தலிறுகின இனிய முழவை ஒப்ப, 56-7. கயிறு பிணித்து காடி வைத்த கலன் உடை மூக்கின் - தகராதபடி கயிற்றாலே வரிந்து காடி வைத்த மிடாவையுடைய அப்பாரில் தலையிலே, 1புளியங்காய் நெல்லிக்காய் முதலியன ஊறவிட்டு வைத்ததனைக் காடியென்றார்; இனிக் காடி நெய்யென்பாருமுளர்; இனிப் பாரிற் 2கழுத்தானவிடத்தே வைத்த மிடாவென்றுமாம். 58. மக உடை மகடூஉ பகடு புறம் துரப்ப-குழவியைக் கைக்கொண்ட மகள் இருந்து பூண்டஎருத்தை முதுகிலே அடிப்ப, சகடப்(50) புதவின்(52) மூக்கின் கண்ணே(57) வேப்பிலைமிடைந்த (59) மகடூஉஇருந்து துரப்பவென முடிக்க. 59. கோடு இணர் வேம்பின் 3ஏடுஇலை மிடைந்த மகடூஉ (58). கொம்பிடத்தேபூங்கொத்தையுடைய வேம்பினுடைய மேன்மையையுடைய இலையைப் பிள்ளைக்குக் காவலாகக்கொண்டிருக்கின்ற மகடூஉ, 60. படலை கண்ணி-தழை விரவினமாலையையும், பரு ஏர் எறுழ் திணி தோள்-பரியஅழகினையும் வலியினையுமுடைய இறுகின தோளினையும்,
1, "காடி-ஊறுகறி" (பெரும்பாண்.308-10. ந.) 2. காடி-கழுத்து; பொருந. 115-6-ஆம் அடிகளின் உரையையும் குறிப்பையும் பார்க்க. 3. "ஏடு" என்பதற்குமேன்மையென்னும் பொருள், "ஏடுமதிக்கண்ணியானை" . (தே.திருநா. ஐயாறு) என்றவிடத்தும் பொருந்துதல் காண்க.
|