217

61. முடலை யாக்கை-முறுக்குண்ட உடம்பினையும்,

முழுவலி மாக்கள் - நிரம்பிய மெய்வலியினையுமுடைய மாக்கள்,

62-3. [சிறுதுளைக் கொடுநுக நெறிபட நிறைத்த, பெருங்கயிற் றொழுகை:] சிறு துளை கொடு நுகம் பெரு கயிறு நெறிபட நிரைத்த ஒழுகை-சிறிய துளையினையுடைய கொடிய நுகத்தின் கண்ணே பெரியகயிற்றாலே எருதுகளை ஒருவழிப்பட நிரைத்துக்கட்டின சகடவொழுங்கினை,

துளைகளிற் செருகின கழிகள் கழுத்தசையப்பட்டு நிற்றலின், கொடு நுகமென்றார். ஒரு சகடத்திற் பல பூட்டுதல் கூறினார்.

63. மருங்கில் காப்ப-எருதுகள் திருகாமல் அச்சு முறியாமல் பக்கத்தே காத்துச்செல்ல,

64. சில் பத உணவின்-இடப்படும் பொருளுக்குச் 1சிறியவாக இடப்படுஉணவினது,

என்றது உப்பை. பதம்-பக்குவம்.

கொள்ளை சாற்றி-விலைசொல்லி,

65. பல் எருது உமணர் பதி போகு நெடுநெறி-இளைத்தாற் பூட்டுதற்குப் பல எருத்தையும் அடித்துக் கொண்டு போம் உப்பு வாணிகர் ஊர்கள்தோறும் செல்லும் நெடிய வழியினையும்,

பதிபோலப் போகுமென்றுமாம்.

மகடூஉத் துரப்ப (58) மாக்கள் (61)காப்பச் (63) சாற்றிப் (64) போகும் நெடு நெறியையுமென்க.

66. எல் இடை கழியுநர்க்கு ஏமம் ஆக-பகற்பொழுது போவார்க்கு இளைப்புத் தீர,

67-76. [மலையவுங் கடலவு மாண்பயந் தரூஉம், அரும்பொருளருத்துந் திருந்துதொடை நோன்றாள், அடிபுதை யரண மெய்திப் படம்புக்குப், பொருகணை தொலைச்சிய புண்டீர் மார்பின், விரவுவரிக் கச்சின் வெண்கை யொள்வாள், வரையூர் பாம்பிற் பூண்டுபுடை தூங்கச், சுரிகை நுழைந்த சுற்றுவீங்கு செறிவுடைக், கருவி லோச்சிய கண்ணகனெறுழ்த்தோட், கடம்பமர் நெடுவே ளன்ன மீளி, உடம்பிடித் தடக்கை யோடா வம்பலர்:]

மலையவும் கடலவும் மாண் பயம் தரூஉம்(67) அரு பொருள் அருத்தும்(68) ஓடா வம்பலர்(76)-மலையிலுள்ளனவும் கடலிலுள்ளனவுமாகிய மாட்சிமையையுடைய பயனைக் கொடுக்கும் பெறு


1"உப்பமைந்தற்றால்" (குறள்,1302) என்பதன் உரையில், ‘உப்பு மிக்கவழித்துய்ப்பது சுவையின்றானாற்போல' (பரிமேல்.) எனவெழுதிய உரை இக்கருத்தைக் குறிப்பித்தல் காண்க.