220

"பெண்ணும் பிணாவு மக்கட் குரிய"(தொல். மரபு. சூ.61) என்பதனால் வந்த பிணாவென்னும் 1ஆகாரவீறு அல்வழிக்கண் வன்கணமன்மையிற் குறியதன் இறுதிச்சினை கெட்டு உகரம் பெறாது நின்றது.

90-92. [நோன்காழ், இரும்புதலையாத்த திருந்துகணை விழுக்கோல், உளிவாய்ச்சுரையின் மிளிர மிண்டி:] இரும்பு தலை யாத்த திருந்து கணை நோன்காழ் விழு கோல் உளி வாய் சுரையின் மிளிர மிண்டி-பூண் தலையிலே அழுத்தின நன்றாகிய திரட்சியையும் வலியையுமுடைத்தாகிய வயிரத்தினையுமுடைய சீரிய கோல் செருகின உளிபோலும் வாயினையுமுடைய பாரைகளாலே கட்டிகள் கீழ்மேலாகக் குத்துகையினாலே,

கோல் செருகப்படுகின்றசுரையையுடைமையிற் சுரையென்றார்; ஆகுபெயர்; சுரை-குழைச்சு.

93. இரு நிலம் கரம்பை படு நீறு ஆடி-கருநிலமாகிய கரம்பை நிலத்தில் உண்டாகிய புழுதியைஅளைந்து,

94. நுண் புல் அடக்கிய வெள் பல் எயிற்றியர்-மெல்லிய புல்லரிசியை வாரியெடுத்துக் கொண்ட வெள்ளிய பல்லியுடைய எயின் குடியிற் பிறந்த மகளிர்,

போகி(90) மிண்டுகையினாலே(92) ஆடி(93) அடக்கிய எயிற்றிய ரென்க.

2மிகவிளைந்து உதிர்ந்த புல்லை எறும்இழுத்துச் சேரவிட்டு வைத்த இடம் அறிந்தெடுத்தல் அந்நிலப்பண்பு.

95-6. பார்வை யாத்த 3பறை தாள் விளவின் நீழல் முன்றில் நிலம் உரல்பெய்து-பார்வைமான் கட்டிநின்ற தேய்ந்த தாளினையுடைய விளவினது நிழலையுடைய முற்றத்திடத்துத் தோண்டின நிலவுரலிலே அப்புல்லரிசியைச் சொரிந்து,

97. குறு காழ் உலக்கை ஓச்சி-குறிய வயிரமாகிய உலக்கையாலே குத்தி (பி-ம்: குற்றி),

97-8. நெடு கிணறு வல் ஊற்று உவரி தோண்டி-ஆழ்ந்த கிணற்றிற் சில்லூற்றாகிய உவர் நீரை முகந்து கொண்டு,

98-9. தொல்லை முரவு வாய் குழிசி முரி அடுப்பு ஏற்றி-பழைய ஒறுவாய் (பி-ம்: வெறுவாய்) போன பானையிலே வார்த்த உலையை முரிந்த அடுப்பிலேவைத்து,


1. தொல். உயிர்மயங்கியல்,சூ.32-

2அகநா.377:3-4.

3. பறைதல்-தேய்தல்: "சுவர்பறைந்த - சுவரிடத்தில் தேய்ந்த" (பெரும்பாண்.189. ந.)