ஈந்தினது விதையைக் கண்டாற்போன்ற மேட்டுநிலத்தே விளைந்த நெல்லினது சிவந்த அவிழாகிய சோற்றை 132-3. ஞமலி தந்த மனவு சூல் உடும்பின் வறை கால்யாத்தது வயின் தொறும் பெறுகுவிர்-நாய்கடித்துக் கொண்டுவந்த அக்கு மணி போலும் முட்டைகளையுடைய உடும்பினது பொரியலாலே மறைத்ததனை மனைகடோறும் பெறுகுவிர்; சேம்பிற் (129) பெறுகுவிரென்க. 134-6. யானை தாக்கினும் அரவு மேல் செலினும் நீல் நிறம் விசும்பின் வல் ஏறு சிலைப்பினும் சூல் மகள் மாறா மறம் பூண் வாழ்க்கை யானை தன் எதிரே செல்லினும் பாம்பு தன் மேலே செல்லினும் நீல நிறத்தையுடைய மேகத்திடத்தே வலிய உருமேறு இடிப்பினும் சூற் கொண்ட மகள் அவையிற்றிற்கு அஞ்சி மீளா மறத்தைப்பூண்ட வாழ்வினையும், 137. வலி கூட்டுணவின் வாள் குடிபிறந்த - தமது வலியாற் 1கொள்ளை கொண்டுண்ணும் உணவினையுமுடைய வாட்டொழிலே செய்யும் குடியிற் பிறந்த, 138. புலி போத்து அன்ன புல் அணல்காளை-புலியினது போத்தை யொத்த புல்லென்ற தாடியையுடையந் அந்நிலத்துத் தலைவன். 139-40. 2 செல் நாய் அன்ன கரு வில்சுற்றமொடு கேளா மன்னர் கடி புலம் புக்கு - தான் குறித்த விலங்கின் மேலே செல்கின்ற நாய் அதனைத் தப்பாமற் கொள்ளுமாறு போன்ற கொடிய வில்லையெடுத்த காவலாளருடனே தன் வார்த்தை கேளாத பகைவருடைய காவலையுடைய நிலத்தே சென்று, 141. நாள் ஆ தந்து 3நறவு நொடைதொலைச்சி-விடியற்காலையிலே அவர்கள் பசுக்களை அடித்துக்கொண்டு போந்து அவற்றைக் கள்ளுக்குவிலையாகப் போக்கி, 142. இல் அடு கள் இன் தோப்பிபருகி - அதற்குப் பின்பாகத் தமது இல்லிலே சமைத்தகள்ளுக்களில் இனிதாகிய 3நெல்லாற் செய்த கள்ளையுண்டு,
1. "கைப்பொருள் வௌவுங்களவேர் வாழ்க்கைக், கொடியோர்" (பெரும்பாண்.40-41) 2. "நாயகர்க்கு நாய்கள்போனட்பிற் பிறழாது, கூஉய்க் குழாஅ முடன்கொட்கு -மாய்படை, பன்றி யனையர் பகைவேந்த ராங்கவர்,சென்றெவன் செய்வர் செரு" (தொல். உவம. சூ. 37.பேர். மேற்,) என்ற விடத்து வீரர்களுக்கு நாயை உவமித்திருத்தல் காண்க. 3."நறவுநொடை நெல்லினாண்மகி ழயரும்" (அகநா. 61:10)
|