172-4. [ஓங்குமிசைக், கோட்டவுங் கொடியவும் விரைஇக் காட்ட, பல்பூ மிடைந்த படலைக் கண்ணி:] காட்ட ஓங்கு மிசை கோட்டவும் கொடியவும் பல் பூ விரைஇ மிடைந்த படலைக் கண்ணி-காட்டிடத்தனவாகிய உயர்கின்ற உச்சியினையுடைய கொம்புகளில் உள்ளவும் கொடிகளில் உள்ளவுமாகிய பல பூக்கள் கலந்து நெருங்கிய 1கலம்பகமாகிய மாலையினையும். 175. ஒன்று அமர் உடுக்கை-ஒன்றாய்ப் பொருந்திய உடையினையும் உடைய, கூழ் ஆர் இடையன் -பாற்சோற்றை உண்கின்ற இடையன், அடி (169)முதலியவற்றை உடைய இடையன். 176. கன்று அமர் நிரையொடு கானத்து அல்கி - கன்றுகள் பொருந்தின பசுத்திரளோடேகாட்டிலே தங்கி, 177-9. [அந்நு ணவிர்புகை கமழக் கைம்முயன்று, ஞெலிகோற் கொண்ட பெருவிறன் ஞெகிழிச், செந்தீத் தோட்ட கருந்துளைக் குழலின்:] ஞெலி கோல் அம் நுண் அவிர் புகை கமழ கை முயன்று கொண்ட செ தீ ஞெகிழி தோட்ட கருதுளை குழலின்-தீக்கடை கோலாலே அழகிய நுண்ணியதாய் விளங்கும் புகை முற்படப் பிறக்கும்படி கையாலே கடைந்துகொண்ட சிவந்த நெருப்பினையுடைய 2கடைக்கொள்ளியால் துளையிட்ட கரிய துளையினையுடைய குழலால் எழுப்பின. பெருவிறலென்பதனை இடையன் எபதனோடு முன்னே கூட்டி எண்ணுக. இனி ஞெலிகோல்-படுத்த கோல், ஞெகிழி-கடைகின்றகோல் என்று உரைப்பர் 180. இன் தீ பாலை முனையின்-மிகவும் இனிய பாலை என்கிற பண்ணைத் தான் வெறுக்கின், 180-82. [குமிழின், புழற்கோட்டுத் தொடுத்த மரற்புரி நரம்பின், வில்யா ழிசைக்கும் விரலெறி குறிஞ்சி:] குமிழின் புழல் கோடு தொடுத்தமரல் புரி விரல் எறி நரம்பின் வில் யாழ் இசைக்கும் குறிஞ்சி-குமிழினது உட்பொய்யாகிய கொம்பிடத்தே வளைத்துக்கட்டின மரற்கயிறாகிய விரலாலே தெறித்து வாசிக்கும் நரம்பினையுடைய வில்லாகிய யாழொலிக்கும் குறிஞ்சிஎன்கிற பண்ணை, 183. பல் கால் பறவை கிளை செத்து ஓர்க்கும்-பல காலினைஉடைய வண்டுகள் தம் சுற்றத்தின் ஓசையாகக் கருதிச் செவிகொடுத்துக் கேட்கும்,
1. "களிவண்டு மிழற்றிய கலம்பகம் புனைந்த, அலங்கலந் தொடையல்கொண் டடியிணை பணிவான்" (திவ். திருப்பள்ளி. 5.) 2. "குறத்தி மாட்டிய வறற்கடைக் கொள்ளி"(புறநா. 108:1.)
|