229

"நண்டுந் தும்பியும்" (தொல்.மரபியல். சூ.31) என்னும் சூத்திரத்திற் 1செவிப்பொறியான் இவை உணர்தல் கூறினாம்.

184. புல் ஆர் வியல் புலம் போகி-புல்லு நிறைந்த அகற்சியையுடைய நிலத்தைக் கடந்துபோய்,

முன்னர் இடையர் குடியிருப்புக் கூறிப் பின்னர் அவர் பசுக்கள் முதலியன நிற்கின்ற முல்லை நிலமும் கூறினார்.

184-5. முள் உடுத்து எழு காடு ஓங்கிய தொழு உடை வரைப்பின்-முள்ளுத் தன்னிடத்தே சூழ்ந்து எழுகின்ற 2விடத்தேதொடரி முதலிய காடுகள் சூழ வளர்ந்த தொழுக்களைஉடைய ஊர்களில்,

இது பசுக்கள் முதலியன மேயாமற் காக்கின்ற இளங்காட்டைஉடைய படைத்தலைவர் இருப்புக் கூறிற்று.

186. பிடி கணத்து அன்ன குதிர் உடை முன்றில்-பிடித்திரள் நின்றாற்போன்ற வரகுமுதலியன நிற்கும் குதிர்களையுடைய முன்றிலினையும்,

187. களிறு தாள் புரையும் திரி மரம் பந்தர்-யானையினது காலை யொக்கும் வரகு திரிகை நட்டு நிற்கும் பந்தரினையும்,


1.இங்கே காட்டிய சூத்திரத்திற்குரிய நச்சினார்க்கினியருரை இப்பொழுது கிடைத்திலது; எனினும் சீவகசிந்தாமணி 892-3 ஆம் பாட்டுக்களின் விசேடவுரையில் அவர் எழுதியுள்ள கீழ்க்கண்ட பகுதி இங்கே பயன்படும்: " ‘நண்டுந்......பிறப்பே' என்று தும்பிக்குச் செவியின் றெனவே இவற்றிற்கும் செவியின்றாமாதலாலே வருத்த மிகுதியான் இவற்றை நோக்கி வாளா கூறியதன்றி வேறன்று; இவை ஈண்டு வந்து கரிபோதலில; 'கேள்வியில்லன வருதலென்னை?' என்பது கடா; அதற்கு விடை: ஆசிரியர், ‘நண்டுந்தும்பியும்' என்று தும்பியைப் பின் வைத்தது, மேல் வருஞ் சூத்திரத்தின், ‘மாவுமாக்களு மையறி வென்ப' (தொல்,மரபு. சூ. 32) என்ற ஐயறிவு இதற்கும் ஏறுதற்கென்றுணர்க; இதனை வாராததனால் வந்தது முடித்தலென்னும் தந்திரவுத்தியாற் கொள்க வென்று ஆண்டு உரைகூறிப்போந்தாம்; அதுவே ஆசிரியர் கருத்தென்பது சான்றோருணர்ந்தன்றே, 'பூத்த பொங்கர்த் துணையொடு வதிந்த, தாதுண் பறவை பேதுற லஞ்சி, மணிநா யாத்த மாண்வினைத் தேரன்' (அகநா. 4: 10 - 12) என்று அப்பொருள் தோன்றக் கூறியதென்றுணர்க. இக்கருத்தான் இவரும் செவியுணர்வுண்டென்று கூறினார்."

2 விடத்தே தொடரி- ஒருவகை முள்மரம்; விடத்தர், விடத்தேர், விடத்தேரையென இப்பெயர் வழங்கும்; "திரிகாய் விடத்தரொடு" (பதிற்.13:14);"தள்ளா விடத்தேர்" (தண்டி. மேற்.);"விடத்தேரை மன்னும்வனம்" (திருவரங்கத்தந்.93.)