230

188-9. குறு சாடு உருளையொடு கலப்பை சார்த்தி நெடு சுவர் பறைந்த புகை சூழ் கொட்டில்-குறிய சகடத்தில் உருளைகளோடே கலப்பையையும் சார்த்தி வைக்கையினாலே நெடியசுவரிடத்தில் தேய்ந்த புகை சூழ்ந்த கொட்டிலினையும் உடைய,

நெடுகக்கட்டி ஒருபக்கத்திலே அடுப்பெரித்து ஒருபக்கத்திலே தொழிலொழிந்த நாளில் சகடையில் உருளையையும் கலப்பையையும் சார்த்தி எருதுகளும் கட்டில் நிற்றலிற் கொட்டி என்றார்.

190-91. பருவம் வானத்து பா மழைகடுப்ப கரு வை வேய்ந்த கவின் குடி சிறு ஊர்-மாரிக்காலத்தை உடைய விசும்பிடத்தே பரந்த மேகத்தை ஒப்ப வரகு வைக்கோலாலே வேய்ந்த அழகினையுடைய குடியிருப்பினை உடைய சிறிய ஊர்களிலே,

சீறூர்-அம்முல்லை நிலத்து உழுதுண்பர் இருப்பு.

192-3. நெடு குரல் பூளை பூவின் அன்ன குறு தாள் வரகின் குறள் அவிழ் சொன்றி-நெடிய கொத்தினையுடைய சிறுபூளையினது பூவை யொத்த குறிய தாளினையுடைய வரகினது சிறிய அவிழ்களாகிய சோற்றை,

194-5. புகர் இணர் வேங்கை வீகண்டன்ன அவரை வால் புழுங்கு அட்டி - நிறத்தை உடைய கொத்தினை உடைய வேங்கைப்பூவைக் கண்டாலொத்த அவரை விதையினது நன்றாகிய பருப்பை மிகவிட்டு,

வேங்கைப்பூ வரிகளை உடைய விதைக்கு உவமை. புழுக்கு-புழுங்க வெந்தது; 1கும்மாயமுமாம்;பருப்புச்சோறுமென்ப.

195-6.2[பயில்வுற், றின்சுவை மூரற் பெறுகுவிர்:]

இடையன் (175) அல்கிப் (176)பாலையைத் தான்முனையின் (180) அதனைக் கைவிட்டு விரலாலே வாசிக்கும் குறிஞ்சியைப் (182)பறவையோர்க்கும் (183) புலத்தைப் போகி (184)வரைப்புக்களின் (185) முன்றில் (186)முதலியவற்றை உடைய சீறூர்களிலே (191)வரகின் சொன்றியைப் (193)புழுக்கை யட்டி (195)மூரலோடே பெறுகுவிரென முடிக்க.


1.கும்மாயம்-புழுக்கிய பச்சைப்பயற்றோடு சருக்கரை முதலியன கூட்டி ஆக்கப்படுவதொரு சிற்றுண்டி; இஃது இப்பெயரோடு விஷ்ணு வாலயங்களில் இக்காலத்தும் வழங்கி வருகின்றது; "பயற்றுத் தன்மை கெடாது கும்மாய, மியற்றி" (மணி .27:185-6)"கும்மாயத்தொடு வெண்ணெய் விழுங்கி" (திவ்.பெரியாழ்வார். 3. 3:3)என்பதில் கும்மாயமென்பதற்கு ஸ்ரீமணவாள மாமுனிகள்,'குழையச் சமைத்த பருப்பு' என்றுபொருள் செய்திருக்கின்றனர்;"பயற்றது கும்மாயம்" (நன்.சூ.299,மயிலை.மேற்.)

2.இதற்கு ஒரு பிரதியிலும் உரை கிடைத்திலது; கலத்தலினாலே இனிய சுவையினையுடைத்தாகிய மூரலோடே பெறுகுவிர் என்க.