196.ஞாங்கர்-அந்நிலத்திற்கு மேல், 197. குடி நிறை வல்சி சொல் உழவர்-அக்குடியிருப்பு நிறைந்த உணவினையுடைய செவ்விய சாலாக உழுகின்ற உழவுத்தொழிலை உடையோர், ஒருசால் இருசால் என்றல் உழவுத்தொழிற்கு மரபு. 198. நடை நவில் பெரு பகடு புதல் பூட்டி- உழவுத்தொழிலிலே பயின்ற பெரிய எருதுகளை வாயிலிலே நுகத்தைப் பூட்டிக்கொண்டு சென்று, 199-200. பிடி வாய் அன்ன மடி வாய் நாஞ்சில் உடும்பு முகம் முழு கொழு மூழ்க ஊன்றி-பிடியினது வாயைஒத்த வளைந்த வாயை உடைய கலப்பையுனுடைய உடும்பினது முகத்தை ஒத்த பெருங்கொழு மறைய அமுக்கி, 201. தொடுப்பு எறிந்து உழுத துளர் படு துடவை-முற்பட வளைய உழுது விதைத்த பின்னர் இடையே உழுத களைகளைக் களைக்கொட்டுச் செத்திய தோட்டத்தை, 202. அரி புகு பொழுதின் -அறுக்கும் பருவம் வருங்காலத்தே, 202-5. [இரியல் போகி, வண்ணக் கடம்பி னறுமல ரன்ன, வளரிளம் பிள்ளை தழீஇக்குறுங்காற், கறையணற் குறும்பூழ் கட்சிச் சேக்கும்;] குறு கால் (204) கறை அணல் குறும்பூழ்(205) -அதன்கண் தங்கும் குறுங்காலினையும் கருமையை உடைய கழுத்தினை உடைய குறும்பூழ், வண்ணம் கடம்பின் நறு மலர் அன்ன(203) வளர் இள பிள்ளை தழீஇ (204)-வெள்ளிய நிறத்தை உடைய கடம்பினது நறுநாற்றத்தினை உடைய பூவை ஒத்த வளருகின்ற இளைய பிள்ளைகள் மிகவும் பறத்தலாற்றாதனவற்றையும் கூட்டிக்கொண்டு, "பார்ப்பும் பிள்ளையும் பறப்பவற் றிளமை" (தொல்.மரபியல், சூ. 4)என்றார். இரியல் போகி (202) கட்சி சேக்கும் (205) - அவர்கள் ஆரவாரத்திற்கு அஞ்சிக் கெடுதற்றன்மையை உடையவாய் ஆண்டு நின்றும் போய்க் காட்டிலே தங்கும், 206. வல் புலம் இறந்த பின்றை-முல்லை நிலத்தைப் போனபின்பு, இதனால், முற்றும் குடிச்சீறூர் உழவரால் உழுதற்குரிய முல்லை நிலமும் கூறினார். இது மருத நிலத்தைச்சேர்ந்த முல்லை நிலம். உழவர்(197) பூட்டி(198) ஊன்றி (200)உழுத துடைவை (201) அரி புகு பொழுதில் (202) குறும்பூழ் (205)பிள்ளை தழீஇப் (204)போகிச் (202) சேக்கும்(205)வன்புலம் என்க.
|