233

221. புல் காய் சுண்ணம் புடைத் தமார்பின்-புல்லிய காயில் தோன்றின தாதை அக்கதிரை முறித்து அடித்துக்கொண்ட மார்பினையும், தாது நீளக் கிடந்தது உரைத்தாற்போன்றது.

222. இரும்பு வடித்தன்ன மடியா மெல் தோல்-இரும்பைத் தகடாக்கினால் ஒத்த திரையாத மெல்லிய தோலினையு உடைய,

223. கரு கை வினைஞர் காதல் அம்சிறாஅர்-வலிய கையால் தொழில் செய்வாருடைய விருப்பத்தை உடைய அழகிய சிறுபிள்ளைகள்,

224. பழ சோறு அமலை முனைஇ-பழைய சோற்றினது கட்டியை வெறுத்து,

224-6. வரம்பில் புது வை வேய்ந்தகவி குடில் முன்றில் அவல் எறி உலக்கை பாடுவிறந்து-வரம்பிடத்துப் புதிய வைக்கோலாலே வேய்ந்த கவிந்த குடிலினுடைய முற்றத்தே அவலை இடிக்கும் உலக்கையினது ஓசை செறிகை யினாலே,

குடில்கிள், பன்றி முதலியவற்றைக் காத்தற்குக் கட்டினவை.

226-7. அயல் கொடு வாய் கிள்ளை படு பகை வெரூஉம்-அதற்கு அயலிடத்தனவாகிய வளைந்த வாயையுடைய கிளிகள் தமக்கு உண்டாகின்ற பகையாக நினைத்து அஞ்சும்,

228. நீங்கா யாணர் வாங்கு கதிர் கழனி- இடையறாத புது வரு வாயினை உடைய வளையும்கதிரினை உடைத்தாகிய கழனியிடத்து,

229. கடுப்பு உடை பறவை சாதி அன்ன-எறியப்பட்டார்க்குக் கடுக்குந் தன்மையைக் கொடுத்தலை உடைய குளவித்திரளை ஒத்த.

230. பைது அற விளைந்த பெரு செ நெல்லின்-பசுமையறும்படி முற்றின பெரிய செந்நெல்லினுடைய,

231. தூம்பு உடை திரள் தாள் துமித்த வினைஞர் - உள்ளுப்பொய்யை உடைத்தாகிய திரண்ட தாளை அறுத்த தொழில்செய்வார்,

232. பாம்பு உறை மருதின் ஓங்கு சினை நீழல்-பாம்பு கிடக்கின்ற மருதினது உயர்ந்த கொம்பால் உண்டாகிய நிழலிலே,

பழைய மரமாதலிற் பாம்பு கிடக்கும் என்றார்.

233. பலி பெறு வியல் களம் மலிய ஏற்றி-ஆண்டு உறையும் தெய்வங்கள் பலி பெறுகின்ற அகன்ற களங்களிலே மிகவும் நிறையப் போராக விட்டு,

234-5. [கணங்கொள் சுற்றமொடு கைபுணர்ந் தாடும், துணங்கையம் பூதந் துகிலுடுத் தவைபோல்:] கணம் கொள் சுற்றமொடு கை புணர்ந்து துணங்கை ஆடும் அம் பூதம் துகில் உடுத்தவை போல்-திரட்சி கொண்ட தம்முடைய சுற்றத்தோடே ஒழுங்காகச் செறிந்துநின்று துணங்கைக் கூத்தாடுகின்ற அழகினை உடைய பூதங்கள் வெள்ளிய துகிலை உடுத்து நின்றவைபோல,