243

339-40. கள் அடு மகளிர் வள்ளம் நுடங்கிய வார்ந்து உகு சில் நீர் வழிந்த குழம்பின்-கள்ளைச்சமைக்கின்ற மகளிர் வட்டில் கழுவின வடிந்து சிந்தும் சிலநீர் பலகால்வடிதலின் நிறைந்துவழிந்த குழம்பிடத்து,

341-2. 1ஈர் சேறு ஆடிய இரு பல் குட்டி பல் மயிர் பிணவொடு ஈரத்தையுடைய சேற்றை யளைந்த கரிய பலவாகிய குட்டிகளையுடைய பலவாகிய மயிர்களையுடைய பெண்பன்றிகளுடனே,

வாயிலிடத்து (337) முற்றத்துக் (338)குழம்பிடத்துச் (340) சேறு (341) என்க.

342. 2பாயம் போகாது-புணர்ச்சியைக்கருதுங்கருத்தாற்போகாமல்,

என்றது புணரிற் கொழிப்பின்றாமென்றவாறு.

என்றது புணரிற் கொழுப்பின்றாமென்றவாறு.

343-5. பல் நாள் குழி நிறுத்து ஓம்பிய குறு தாள் ஏற்றைகொழு நிணம் தடியொடு-பலநாள் குழியிலே நிறுத்திப் பாதுகாத்த குறிய காலையுடைய ஆண்பன்றியின் கொழுவிய நிணத்தையுடைய தசையோடே,

3"ஆற்றலொடு புணர்ந்த வாண்பால்" ஆதலின் ஏற்றையென்றார்.

345. கூர் நறா பெறுகுவிர்-களிப்புமிக்க கள்ளைப் பெறுகுவிர்;

போகாமற் (342) குழிநிறுத்து (344)என்க.

அசையிற் (336) பெறுகுவிரென்க.

346-8. [வான மூன்றிய மதலை போல,வேணி சாத்திய வேற்றருஞ் சென்னி, விண்பொர நிவந்த வேயா மாடத்து:]

வானம் ஊன்றிய மதலை போல (346)விண் பொர நிவந்த மாடம் (348)-ஆகாயத்தே திரிகின்ற தேவருலகுக்கு முட்டுக்காலாக ஊன்றிவைத்த ஒருபற்றுக்கோடு போல விண்ணைத்தீண்டும்படி ஓங்கினமாடம்,

சாத்திய ஏணி ஏற்றி அரு சென்னி (347) மாடம் (348)-தன்னிடத்லுச் சாத்திய ஏணியால் ஏறுதற்கரிய தலையினையுடைய மாடம்,

4வேயா மாடத்து (348)-கற்றைமுதலியவற்றால் வேயாது சாந்திட்ட மாடத்திடத்தே,


1 "விழியாக் குருளை மென்முலைசுவைப்பக், குழிவயிற் றுஞ்சுங் குறுந்தாட் பன்றி" (தொல். மரபு. சூ. 8, பேர். மேற்)

2 பாயம்-மனத்திற்கு விருப்பமானதென்று பொருளெழுதுவர்; குறிஞ்சிப். 58.

3 "ஆற்றலொடு புணர்ந்தவாண்பாற் கெல்லாம், ஏற்றைக் கிளவியுரித்தென மொழிப" (தொல். மரபு. சூ. 49)

4 "வேயாமாடம்-தட்டோடிட்டுச் சாந்துவாரப்பட்டன" (சிலப் . 5:7,அரும்பத.)