"பிள்ளை குழவி கன்றே போத்தெனக், கொள்ளவு மமையு மோரறி வுயிர்க்கே" (தொல். மரபு. சூ. 24) என்றதனாற் குழவித்தீநீர் என்றார். 358. கவை முலை இரு பிடி கவுள் மருப்ப ஏய்க்கும்-கவைத்த முலையையுடைய பெரிய பிடியினுடைய கவுளிடத்துக் கொம்புகளையொக்கும், 359. [குலைமுதிர் வாழைக் கூனி வெண்பழம் :] குலை கூனி முதிர் வாழை வெள்பழம்-குலைகள் தம்பெருமையாலே நிலத்தே தாழ வளைந்து முற்றின வாழையினது வெள்ளிய பழத்தையும், 360-61. திரள் அரை பெண்ணை நுங்கொடு பிறவும் தீ பல்தாரம் முனையின்-திரண்ட அடியையுடைய பனையினது நுங்கோடே வேறும் இனிய பலபண்டங்களையும் வெறுக்கின், 361-2. [சேம்பின், முளைப்புறம் :] முளை புறம் சேம்பின் முளையை இடத்தேயுடைய சேம்பினது இலையோடே, 362. முதிர் கிழங்கு ஆர்குவிர்-முற்றின வள்ளிமுதலிய கிழங்குகளைத் தின்பீர் ; சேப்பிற் (355) பழத்தையும் (356) நீரையும் (357) பழத்தையும் (359) நுங்கோடே (360)பலபண்டங்களையும் முனையிற் (361) கிழங்கார் குவிரென்க. 362-4. பகல் பெயல் மழை வீழ்ந்தன்ன மா தாள் கமுகின் புடை சூழ் தெங்கின் -பகற்பொழுதிலே பெய்தலையுடைய மழை கால்விழுந்தாலொத்த பெரிய தண்டினையுடைய கமுகுகளின் பக்கத்தே சூழ்ந்த தெங்கினுடைய, 364. முப்புடை திரள் காய்-மூன்றுபுடைப்பினையுடைய திரண்டகாய், பழுத்தால் அடி மூன்றாகப்புடைத்தல் அதற்கியல்பு. இனி மூப்புடைத்திரள் காயும் பாடம். 365-6. ஆறு செல் வம்பலர் காய் பசி தீர சோறு அடு குழிசி இளக விழூஉம்-வழிச்செல்கின்ற புதியோர் தமது மிக்கபசி தீரும்படி சோற்றை ஆக்குகின்ற பானை அடுப்பினின்றும் அசைந்துவிழும்வடி நிலத்தே விழும், 367. வீயா யாணர் வளம் கெழுபாக்கத்து-விடாத புதுவருவாயினையுடைய செல்வம்பொருந்தின பாக்கத்திடத்து, 368. பல் மரம் நீள் இடைபோகி-பலமரங்கள் வளர்ந்த இடத்திலே போய்,
முகை"(குறுந். 228:1). "தாழை வீழ்கயிற் றூசல்" (அகநா. 20:6) எனக் கூறப்படுதல்காண்க.
|