273

1. நன தலை உலகம் வளைஇ-அகலத்தை இடத்தேயுடைய உலகத்தை வளைத்து,

1-2. [நேமியொடு வலம்புரி பொறித்த மாதாங்கு தடக்கை :]
நேமியொடு வலம்புரி தாங்கு தட கை மாஅல் (3)-சக்கரத்தோடே வலம்புரியைத்தாங்கும் பெரிய கைகளையுடைய மால்,மா1பொறித்த மாஅல் (3)- திருமார்பிடத்தே திருமகளைவைத்த மாலை,

3. நீர் செல நிமிர்ந்த மாஅல் போல-மாவலி வார்த்த நீர் தன் கையிலே சென்றதாக உயர்ந்த திருமாலைப்போல,
இனி, 2நேமியோடே வலம்புரியுமாகிய உத்தம இலக்கணங்களைப் பெற்றிருக்கின்ற திருமகளையணைத்தகையிலே நீர்செல்லவென்றுமாம்.
இதனானே 3முல்லைக்குரிய தெய்வங்கூறினார்.

4-5. [பாடிமிழ் பனிக்கடல் பருகி வலனேர்பு, 4கோடுகொண்டெழுந்த கொடுஞ்செல வெழிலி :]
பாடு இமிழ் பனி கடல் பருகி வலன் ஏர்பு கோடு கொண்டு-ஒலி முழங்குகின்ற குளிர்ச்சியையுடைய கடலைக்குடித்து வலமாகவெழுந்து மலைகளை இருப்பிடமாகக்கொண்டு,
உலகம் வளைஇ (1) எழுந்த கொடு செலவு எழிலி-பெய்யுங்காலத்தே உலகத்தை வளைந்தெழுந்த கடிய செலவினையுடைய மேகம்,
மால்நீர் செலநிமிர்ந்தாற்போல மேகமும் நீர்செலநிமிர்ந்ததென்றார்.
இனி, உலகத்தைத் திருவடிகளிலே அணைத்துக்கொண்டுநிமிர்ந்த மாலென்றுமுரைப்பர்.

6. பெரு பெயல் பொழிந்த சிறு புல் மாலை-பெரிய மழையைப் பெய்த சிறுபொழுதாகிய வருத்தஞ்செய்கின்ற மாலைக்காலத்துப் பாவை விளக்கு (85) எனக்கூட்டுக.


1பொறித்தல்-வைத்தல் ; சிறுபாணாற்றுப்படை, 48, உரையைப் பார்க்க.

2இங்கே, நேமி-சக்ரரேகை, வலம்புரி-சங்கரேகையெனக் கொள்க ; இவை கைக்குரிய உத்தம இலக்கணங்கள் ; "வலம்புரி பொறித்த வண்கை மதவலி" (சீவக. 204) ; "சங்க லேகையுஞ் சக்ரலேகையும், அங்கை யுள்ளன வையற்கு" (சூளா. குமார, 45) ; "சங்கு சக்கரக் குறியுள தடக்கையில்" (கம்ப. மராமரப். 117.)

3"மாயோன் மேய காடுறை யுலகமும்" தொல். அகத். சூ, 5. 

4"ஞாயிறு சுமந்த கோடுதிரள் கொண்மூ" (புறநா. 35: 17) என்பதனுரையில் கோடென்பதற்குப் பக்கமென்று பொருளெழுதுவர் அதனுரையாசிரியர்.