285

91. வெல் கொடி உயரி-எக்காலமும் 1வென்றெடுக்கின்ற கொடியை எடுத்து,

91-2. வலன் ஏர்பு வயிரும் வளையும் ஆர்ப்ப-வெற்றி தோன்றிக் கொம்பும் சங்கும் முழங்க,

92-3. அயிர செறி இலை காயா அஞ்சனம் மலர - நுண்மணலிடத்தனவாகிய நெருங்கின இலையினையுடைய காயா அஞ்சனம்போல அவிழ,

94. முறி இணர் கொன்றை நல் பொன் கால-தளிரினையும் கொத்தினையுமுடைய கொன்றை நன்றாகிய பொன்னைச் சொரிய,

95. கோடல் குவி முகை அங்கை அவிழ - கோடலினது குவிந்த முகைகள் அகங்கைபோல விரிய,

96. 2 தோடு ஆர் தோன்றி குருதி பூப்ப-திரட்சி நிறைந்த தோன்றி உதிரம்போலப் பூப்ப,

97. கானம் நந்திய செ நிலம் பெரு வழி-காடு தழைத்த சிவந்த நிலத்திற் பெருவழியிலே,

98-100. [வானம் வாய்த்த வாங்கு கதிர் வரகிற், றிரிமருப் பிரலை யொடு மடமா னுகள,வெதிர்செல் வெண்மழை பொழியுந் திங்களின் :]

வானம் வாய்த்த வரகு-மழை வேண்டப்பெய்த வரகு,

எதிர் செல் வெள் மழை பொழியும் திங்களில் வாங்கு கதிர் வரகின்-எதிர்காலத்துக்குப் பெய்யச் செல்கின்ற வெள்ளியமழை சிறுதுவலையைப் பொழியும் முன்பனி தொடங்குந் திங்களிலே வளைகின்ற கதிரையுடைய வரகிடத்தே, 

திரி மருப்பு இரலையொடு மடம் மான் உகள-முறுக்குண்ட கொம்பினையுடைய 3புல்வாய்க்கலையோடே மடப்பத்தையுடைய மான்துள்ள, 

மழையால் தண்ணீரும் புல்லும் நிறையப்பெற்றுப் புணர்ந்துதிரியுமென்ற கருப்பொருளால், அவற்றைக்கண்ட அரசனுக்கு வேட்கை மிகுதி கூறிற்று.

மலரக் (93) கால (94) அவிழப் (95) பூப்ப (96) உகளக் (99) கானம் நந்திய பெருவழி (97) யென்க.

இவையெல்லாம் வேட்கைவிளைதற்குக் காரணமாயின.

101. முதிர் காய் 4வள்ளி அம் காடு பிறக்கு ஒழிய-தன்பருவம் வந்தால் முதிருங்காயையுடைய வள்ளியங்காடு பின்னாக,


1முருகு. 67-ஆம் அடியின் குறிப்புரையைப் பார்க்க.

2தோடு-தொகுதி ; "தோடு கொள் முரசம்-தொகுதிகொண்ட முரசங்கள்" (புறநா. 238:8, உரை)

3 "இரலையுங் கலையுங் புல்வாய்க் குரிய" (தொல். மரபு. சூ. 44) ; "புல்வா யிரலை" (புறநா. 374:2)

4வள்ளி-ஒருவகைக் கொடி ; பெரும்பாண். 370-71, ந.