340

1சுருளும் படியுமாகப் பண்ணினவிடத்துப் பண்ணிநிற்கும் யானையென்றுரைப்பாருமுளர்.

16-7. [கண்டுதண்டாக் கட்கின்பத், துண்டுதண்டா மிகுவளத்தான் :]

2உண்டு தண்டா மிகு வளத்தான்-உண்டு அமையாத உணவுமிகுகின்ற செல்வத்தோடே,

கண்டு தண்டா கட்கு இன்பத்து-நோக்கியமையாத கட்கு இனிமையினையும்,

18. உயர் பூரிமம் விழு தெருவில்-உயர்ந்த 3சிறகுகளையுமுடைய சீரிய தெருவிலிருக்கும் மாந்தர் (20),

பூரிமம்-சாந்திட்ட தொட்டிகளென்பாருமுளர்.

19-20. [பொய்யறியா வாய்மொழியாற், புகழ்நிறைந்த நன்மாந்தரொடு :] வாய் மொழியால் புகழ் நிறைந்த பொய் அறியா நல் மாந்தரொடு- 4மெய்ம்மொழியே எக்காலமும் கூறுதலாற்பெற்ற புகழ் நிறைந்த 5பொய்யைக் கேட்டறியாத நல்லஅமைச்சருடனே,

21. 6நல் ஊழி அடி படா-நன்றாகிய ஊழிக்காலமெல்லாம் தமக்கு அடிப்பட்டு நடக்க.

22. பல் வெள்ளம் மீ கூற-பல 7வெள்ளமென்னும் எண்ணைப் பெற்ற காலமெல்லாம் அரசாண்டதன்மையை மேலாகச் சொல்லும்படி,

23. உலகம் ஆண்ட உயர்ந்தோர் மருக-உலகத்தையாண்ட உயர்ச்சி பெற்றோர் குடியிலுள்ளவனே,

மாதிரம் கொழுக்க (10) வித்தியதுவிளைய (11) நிலனும் மரனும் நந்த (12) வளிகொட்கையினாலே (5) மழை தொழிலுதவ (10) என முடிக்க.


1 இவ்வாறமைந்த படியினைக் களிற்றுப்படி யென்று வழங்குவர்.

2 உண்டு-நுகர்ந்து எனலும் பொருந்தும்.

3 சிறகு-தெருவின் இருபுறத்துமுள்ள வீடுகளின் வரிசை ; ‘தென்சிறகு வடசிறகு' எனவரும் வழக்கினையுணர்க.

4 ";பொய்யாமை யன்ன புகழில்லை" (குறள், 296)

5 ";பொய்ச்சொற் கேளா வாய்மொழி மன்னன்" (கம்ப. கைகேசி. 31)

6 ";நல்லூழியென்றார், கலியூழியல்லாத ஊழியை" (மதுரைக். 781-2, ந.) என்பர் பின்.

7 வெள்ளம்-ஒருபேரெண் ; "வெள்ள வரம்பி னூழி" (ஐங். 281:1) ; "வெள்ளமு நுதலிய, செய்குறி யீட்டம்" (பரி. 2:14-5) ; தொல். புள்ளி, சூ, 98, உரையைப் பார்க்க.