347

72. தொன்று மொழிந்து தொழில் கேட்ப-தம்முடன் பழமையைச்சொல்லி ஏவல் கேட்கும்படி,

73. வெற்றமொடு வெறுத்து ஒழுகிய-வெற்றியோடே செறிந்து நடந்த,

74. கொற்றவர்தம் கோன் ஆகுவை-வெற்றிடையோர் தம்முடைய தலைவனான தன்மையையுடையை,

75-6. வான் இயைந்த இரு முந்நீர் பேஎம் நிலைஇய இரு பௌவத்து-மேகம்படிந்த பெரிதாகிய 1மூன்று நீர்மையையுடைய அச்சம் நிலைபெற்ற கரிய கடலிடத்து,

77-9. [கொடும்புணரி விலங்குபோழக், கடுங்காலொடு கரைசேர, நெடுங்கொடிமிசை யிதையெடுத்து :]

கடு காலொடு கொடு புனரி விலங்கு போழ இதை எடுத்து-கடிய காற்றாலே வளைகின்ற திரையைக் குறுக்கே பிளந்தோடும்படி பாய்விரிக்கப்பட்டு,

80. இன்னிசைய முரசம் முழங்க-இனிய ஓசையையுடைய முரசம் முழங்காநிற்க,

81-2. பொன் மலிந்த விழு பண்டம் நாடு ஆர-பொன்மிகுதற்குக் காரணமாகிய சீரிய சரக்குகளை நாட்டிலுள்ளார் நுகரும்படியாக,

[நன்கிழிதரும் :] கரை சேர (78) நன்கு இழிதரும்-கரையைச் சேர வாணிகம் வாய்த்துவந்து இழிதலைச்செய்யும்,

83. [ஆடியற் பெருநாவாய் :] நெடு கொடி மிசை (79) ஆடு இயல் பெரு நாவாய்-நெடிய கொடி பாய்மரத்தின்மேலே ஆடும் இயல்பினையுடைய பெரிய மரக்கலம்,

இதையெடுத்து (79) முழங்க (80) ஆர இழிதரும் (81) நாவாயென்க.

84-5. மழை முற்றிய மலை புரைய துறை முற்றிய துளங்கு இருக்கை-கருமேகஞ்சூழ்ந்த மலைபோலக் கடல்சூழ்ந்த அசைகின்ற இருப்பினையும்,

துறை : ஆகுபெயர். சரக்குப்பறித்தற்குக் கடலில் நின்றமரக்கலங்கள் அக்கடல் சூழ நின்றதற்கு மழைமுற்றிய மலை உவமமாயிற்று.

நாவாய் துளங்கிருக்கையென்க.

86. தென் கடல் குண்டு அகழி-தெளிந்த கடலாகிய ஆழத்தையுடைய கிடங்கினையுமுடைய.

87-8. சீர் சான்ற உயர் நெல்லின் ஊர் கொண்ட உயர் கொற்றவ-தலைமையமைந்த உயர்ந்த நெல்லின்பெயரைப்பெற்ற சாலியூரைக் கொண்ட உயர்ந்த வெற்றியையுடையவனே,


1 மூன்று நீர்மை-நிலத்தைப் படைத்தல், காத்தல், அழித்தல் என்பன ; பெரும்பாண். 441, குறிப்புரையைப் பார்க்க.