349

வருடைய மகளிராடும் குரவைக்கூத்தின் ஓசையோடேகூடி ஆரவாரியா நிற்ப,

98. ஒருசார் விழவு நின்ற வியல் ஆங்கண்-ஒருபக்கம் விழாக் கொண்டாடுதலாற் பிறந்த ஓசைகள் மாறாமல் நின்ற அகலத்தையுடைய ஊர்களிடத்தே யிருந்து,

பாடுசிலம்புமிசை (90) முதலியன குரவையொடு (97) என்றும் (95) ஒலிப்ப (97) ஒருசார் விழவுநின்ற ஊரென்க.

99. முழவு தோள் முரண் பொருநர்க்கு-முழவுபோலும் தோளினையுடையராய்க் கல்வியால் மாறுபடுதலையுடைய 1தடாரிப் பொருநர்க்கு,

100-102. உரு கெழு பெரு சிறப்பின் இரு பெயர் பெரு ஆயமொடு இலங்கு மருப்பின் களிறு கொடுத்தும் - அச்சம் பொருந்திய பெரிய தலைமையையுடைய 2கன்றும்பிடியுமென்னும் இரண்டுபெயரையுடைய பெரிய திரளுடனே விளங்குகின்ற கொம்பினையுடைய களிறு களைக்கொடுத்தும்,

இருபெயர்க்கு ஆடும் மாடுமென்பாருமுளர்.

103. பொலந்தாமரை பூ சூட்டியும்-பொன்னாற்செய்த தாமரைப் பூவைச் சூட்டியும்,

104-5. [நலஞ்சான்ற கலஞ்சிதறும், பல்குட்டுவர் வெல்கோவே :]

நலம் சான்ற கலம் சிதறும்கோவே-நன்மையமைந்த பேரணிகலங்களை எல்லார்க்குங்கொடுக்குங்கோவே,

ஊர்களிடத்தே யிருந்து (98) பொருநகர்க்குக் (99) கொடுத்தும் (102) சூட்டியும் (103) அமையாது கலஞ்சிதறுங்கோவேயென்க.

பல் குட்டுவர் வெல்கோவே-பலவாகிய குட்டநாட்டிலுள்ளாரை வெல்லுங்கோவே,

என்பது 3அடை.

இதனால், தன்னாட்டிலூர்களிலிருந்து கொடுக்கின்ற சிறப்புக் கூறினார்.

106. கல் காயும் கடு வேனிலொடு-மலைகள் காய்தற்குக் காரணமாகிய கடிய முதுவேனிலாலே,

107. இரு வானம் பெயல் ஒளிப்பினும்-பெரியமேகம் மழையைத் தன்னிடத்தே மறைத்துக்கொள்ளினும்,


1 தடாரி-கிணைப்பறை; பு. வெ. 218, உரை.

2 "கன்றொடு, கறையடி யானை யிரியல் போக்கும், ....................... ஆய்" (புறநா. 135:11-3), "கன்று டைப்பிடி நீக்கிக் களிற்றினம், வன்றொடர்ப்படுக் கும்வன வாரி" (கம்ப. நாட்டு. 32) என்பன இங்கே ஆராயத்தக்கவை.

3 ‘அடை' என்றது ‘பல்குட்டுவர் வெல்' என்றதனை.