108. [வரும்வைகன் மீன்பிறழினும் :] வைகல் வரும் மீன் பிறழினும்-தான் தோன்றுதற்குரிய நாளிலே தோன்றும் 1வெள்ளி தென்றிசையிலே எழினும், 109. வெள்ளம் மாறாது விளையுள் பெருக-யாறுகள் வெள்ளம் மாறாமல் வந்து விளைதல் பெருகுகையினாலே, 110. நெல்லின் ஓதை-முற்றின நெல்லுக் காற்றடித்து அசைதலாலே எழுந்த ஓசை, அரிநர் கம்பலை-அதனை அறுப்பாருடைய ஓசை, 111. புள் இமிழ்ந்து ஒலித்கும் இசை-பறவைகள் கத்துகையினாலே ஆரவாரிக்கும் ஆரவாரம், என்றும்-எந்நாளும், 112-3. சுலம் புகன்று சுறவு கலித்த புலவு நீர்வியல் பௌவத்து-தம்முள் மாறுபாட்டை விருப்பிச் சுறாக்கள் செருக்கித்திரிகின்ற புலால் நாற்றத்தையுடையதாகிய நீரையுடைய அகற்சியையுடைய கடலிடத்துத் துவலை (115) 114-5. நிலவு கானல் முழவு தாழை குளிர் பொதும்பர் நளிதூவல்-நிலாப்போலும் மணலையுடைய கரையினிற் குடமுழாப்போலுங்காயை (பி-ம். தாளை) யுடைய தாழையை வேலியாகவுடைய குளிர்ச்சியையுடைய இளமரக்காவின்கண்ணே வந்து செறிதலையுடைய துவலையின் ஓசை, 116. நிரை திமில் வேட்டுவர் கரை சேர் கம்பலை-நிரைத்த மீன் படகாலே வேட்டையாடுவார்வந்து கரையைச்சேரும் ஆரவாரம்,
1 வெள்ளிக்கோள் தென்றிசையில் எழுதல் தீயநிமித்தம் ; இது, "வசையில்புகழ் வயங்குவெண்மீன், றிசைதிரிந்து தெற்கேகினுந், தற்பாடிய தளியுணவிற், புட்டேம்பப் புயன்மாறி, வான்பொய்ப்பினுந் தான் பொய்யா, மலைத்தலைய கடற்காவிரி" (பட்டினப். 1-6), "வறிதுவடக் கிறைஞ்சிய சீர்சால் வென்ளி, பயங்கெழு பொழுதோ டாநிய நிற்ப", "நிலம்பயம் பொழியச் சுடர்சினந் தணியப், பயங்கெழு வெள்ளி யாநிய நிற்ப" (பதிற். 24:24-5, 69:13-4), "மைம்மீன் புகையினுந் தூமந் தோன்றினுஞ், தென்றிசை மருங்கின் வெள்ளி யோடினும், ................. பெயல்பிழைப் பறியாப் புன்புலத் ததுவே", "வெள்ளி தென்புலத்துறைய விளைவயற், பள்ளம் வாடிய பயனில் காலை" (புறநா. 117:1-7, 388:1-2), "கரியவன் புகையினும் புகைக்கொடி தோன்றினும், விரிகதிர் வெள்ளி தென்புலம் படரினும், ................ காவிரிப் புதுநீர்க் கடுவரல் வாய்த்தலை" (சிலப். 10:102-8) என்பனவற்றால் அறியலாகும்.
|