117. இரு கரு செறுவின் வெள் உப்பு பகர்நரொடு - பெரியகழியிடத்து உப்புப்பாத்தியிலே வெள்ளிய உப்பைவிற்கும் 1அளவர் ஒலியோடே, 118-24. [ஒலியோவாக் கலியாணர், முதுவெள்ளிலை மீக்கூறும், வியன்மேவல் விழுச்செல்வத், திருவகையா னிசைசான்ற, சிறுகுடிப் பெருந்தொழுவர், குடிகெழீஇய நானிலவரொடு, தொன்றுமொழிந்து தொழில்கேட்ப :] சிறு குடி பெரு தொழுவர் (122) ஒலி ஓவா கலி யாணர் (118) முதுவெள்ளிலை (119)-சிறிய குடிகளாய்ப் பெரிய தொழில்களைச் செய்வாருடைய ஆரவாரமும் ஒழியாத பெருக்கினையுடைத்தாகிய புதுவருவாயினையுடைய முதுவெள்ளிலை யென்னுமூர், இது குறுநிலமன்னரிருப்பு. பகர்நரொலியோடே (117-8) நெல்லினோதை (110) முதலிய ஒலி என்றும் (111) ஓவாத முதுவெள்ளிலையென்க. மீ கூறும் (119) இருவகையான் (111) வியல் மேவல் விழு செல்வத்து (120) இசை சான்ற (121) குடி கெழீஇய நானிலவரொடு (123)-உலகத்துத் தொழில்களில் மேலாகச்செல்லும் உழவு வாணிகமென்கின்ற இரண்டுகூற்றாலே அகலம் பொருந்துதலையுடைய சீரிய செல்வத்தாலே புகழ்நிறைந்த குடிமக்கள் பொருந்தின நான்குநிலத்து வாழ்வாருடனே, தொன்று மொழிந்து தொழில் கேட்ப (124)-பழமைகூறிநின்று ஏவலைக் கேட்கும்படியாக, 125-7. கால் என்ன கடிது உராஅய் நாடு கெட எரி பரப்பி ஆலங்கானத்து அஞ்சுவர இறுத்து-காற்றென்னும்படி கடிதாகப்பரந்து சென்று பகைவர் நாடுகெடும்படி நெருப்பைப்பரப்பித் 2தலையாலங்கான மென்கின்ற ஊரிலே பகைவர்க்கு அச்சந்தோன்றும்படி 3விட்டு, "எரிபரந்தெடுத்தல்" (தொல். புறத். சூ. 8) என்னுந் துறை கூறிற்று.
1 அளவர்-நெய்தனிலமாக்களுள் ஒருவகையார் ; உப்பளத்திற்குரிய தொழில் செய்வோர். 2 இவ்வூர் தலையாலங்காடென்று வழங்கும் ; இது தேவாரம்பெற்ற ஒரு சிவதலம் ; சோழநாட்டிலுள்ளது ; இவ்வூரிற் பகைவரெழுவரையும் வென்றதுபற்றியே தலையாலங்கானத்துச் செருவென்ற நெடுஞ்செழிய னென்று இப்பாண்டியன் கூறப்படுவான்; சிலப்பதிகாரத்திற் கூறப்படுபவன் ஆரியப்படை கடந்த நெடுஞ்செழியன். 3 விட்டு-தங்கி ; விடுதலென்பது பகைமேற்சென்றோர் தங்குவதற்கே பெரும்பாலும் வழங்கும் ; பு. வெ. உரை.
|