352

128-9. அரசு பட அமர் உழக்கி முரசு கொண்டு கனம்வேட்ட-நெடுநில மன்னரிருவரும் குறுநிலமன்னரைவரும் படும்படி போரிலே வென்று அவர் முரசைக் கைக்கொண்டு களவேள்விவேட்ட,

எழுவராவர் : 1சேரன், செம்பியன், திதியன், எழினி, எருமையூரன், இருங்கோவேண்மான், பொருநனென்பார்.

130. அடு திறல் உயர் புகழ் வேந்தே- 2கொல்லுகின்ற வலியுயர்ந்த புகழையுடைய வேந்தேயென்க.
நானிலவரோடே (123) முதுவெள்ளிலை (119) தொழில் கேட்பத் (124) திறலுயர்ந்த வேந்தனே.

இது 3தலையாலங்கானத்து வென்றமை கூறிற்று.

131. நட்டவர் குடி உயர்க்குவை-நின்னுடனே நட்புக்கொண்டவருடைய குடியை உயர்த்தலைச்செய்வை ;

132. செற்றவர் அரசு பெயர்க்குவை-நீசெறப்பட்டவர் அரசுரிமையை வாங்கிக்கோடலைச் செய்வை ;

133-4. பெரு உலகத்து மேஎந்தோன்றி சீர் உடைய விழு சிறப்பின்-பெரிய நன்மக்களிடத்தே மேலாய்த்தோன்றுகையினாலே புகழையுடைய விழுமிய தலைமையினையும்,

135. விளைந்து முதிர்ந்த விழு முத்தின்-சூல்முற்றி ஒளிமுதிர்ந்த சீரிய முத்தினையும்,

136. இலங்கு வளை இரு சேரி-விளங்குகின்ற சங்கினையுமுடைய பெரிய சங்குகுளிப்பாரிருப்பினையும்,
முத்தினையும் சங்கினையுமுடைய சேரியென்க.

137. கள் கொண்டி குடி பாக்கத்து-கள்ளாகிய உணவினையுடைய இழிந்த குடிகளையுடைய சீறூர்களையுமுடைய,

கொண்டி-கொள்ளப்படுதலின் உணவாயிற்று ; கொள்ளையுமென்ப.


1 மதுரைக். 55, 56-ஆம் அடிகளின் குறிப்புரைகளைப் பார்க்க.

2 "மறம்வீங்குபல்புகழ்" (பதிற். 12:8) என்பதும் அதனுரையும் ஈண்டு அறிதற்பாலன.

3 நெடுஞ்செழியன் தலையாலங்கானத்துச் செருவென்றமை பின்னுள்ள செய்யுட்களாலும் விளங்கும். "கலிய னெடுந்தேர்க் கைவண் செழிய, னாலங் கானத் தமர்கடந் துயர்த்த, வேலினும் பல்லூழ் மின்னி", "தென்னர் கோமா, னெருவுறழ் திணிதோ ளியறேர்ச் செழிய, னேரா வெழுவ ரடிப்படக் கடந்த, வாலங் கானத் தளர்ப்பினும் பெரிது" (அகநா. 175:10-12, 209:3-6) ; "இமிழ்கடல் வளைஇய வீண்டகன் கிடக்கைத், தமிழ்தலை மயங்கிய தலையாலங் கானத்து, மன்னுயிர்ப் பன்மையுங் கூற்றத் தொருமையு, நின்னொடு தூக்கிய வென்வேற்செழிய" (புறநா. 19:1-4)