353

138. நல் கொற்கையோர் நசை பொருந-நன்றாகிய கொற்கையென்னும் ஊரிலுள்ளோர் நச்சுதலைச் செய்யும் பொருநனே,

இதனாற் கொற்கைக்குரியோனென்றார்.

சிறப்பினையும் (134) சேரியினையும் (136) பாக்கத்தினையு (137) முடைய கொற்கை.

139-40. செற்ற தெவ்வர் கலங்க தலைசென்று அஞ்சு வர தட்கும் அணங்கு உடை துப்பின்-தாங்கள்செறப்பட்ட பகைவர்மனம் கலங்கும்படி அவரிடத்தே சென்று அவர்க்கு அச்சந்தோன்றத்தங்கும் வருத்தத்தையுடைத்தாகிய வலியினையும்,

141. கொழு ஊன் குறை கொழு வல்சி-கொழுத்த இறைச்சியையுடைய கொழுத்திருக்கின்ற சோற்றினையும்,
ஊனைக் கூட இட்டு ஆக்குதலிற் கொழுவல்சியென்றார். கொழுவல்சி-கொழுவினாலாகிய வல்சியென்றுமாம் ; இஃது 1ஆகுபெயர்.

142. புலவு வில் -2எய்த அம்புதன்னை மீண்டும் தொடுத்தலிற் புலானாற்றத்தையுடைய வில்லினையும்,

பொலி கூவை-பொலிந்த 3கூவைக்கிழங்கினையும்,

கூவை-திரளுமாம்.

143. ஒன்றுமொழி வஞ்சினங்கூறுதலையும்

ஒலி இருப்பின் - ஆரவாரத்தையுடைய குடியிருப்பினையுமுடைய,

144. தென்பரதவர் போர் ஏறே-தென்றிசைக்கண் வாழும் பரதவர்க்குப் போர்த்தொழிலைச் செய்யும் ஏறாயவனே,

இதனாற் பரதவரைத் தனக்குப் படையாக அடிப்படுத்தினமை கூறினார்.

துப்பு (140) முதலியவற்றையுடைய பரதவரென்க.

பரதவர்-தென்றிசைகட்குறுநிலமன்னர். அது, "தென்பரதவர் மிடல்சாய, வடுவடுகர் வாளோட்டிய" (புறநா. 378:1-2) என்னும் புறப்பாட்டானுமுணர்க.

145. அரிய எல்லாம் எளிதினின் கொண்டு-பிறர்க்கு அரிய நுகர் பொருள்கலெல்லாம் எளிதாக நின்னூரிடத்தேயிருந்து 4மனத்தாற் கைக்கொண்டு,


1 ஆகுபெயரென்றது கொழுவென்பதனை ; அது கொழுவினாலாகிய வேளாண்மைக்காயிற்று. கொழுவல்சி யென்பதனோடு, "பகடு நடந்த கூழ்" (நாலடி. 2) என்பதனை ஒப்பு நோக்குக.

2 அம்பு புலால் நாறுதல் இதனாற் பெறப்படும் ; "புலவுநுனைப்பகழி"

(பெரும்பாண். 269) என்பதன் குறிப்புரையைப் பார்க்க.

3 மலைபடு. 137 ; புறநா. 29:19.

4 "ஒன்னோர், ஆரெயி லவர்கட் டாகவு நுமதெனப், பாண்கட னிறுக்கும் வள்ளியோய்" (புறநா. 203:9-11); இராமன் இலங்கை கொள்வதன்முன் வீடணற்குக் கொடுத்த துறையுமது; தொல். புறத், சூ. 12. ந.