154-5. இழிபு அறியா பெருதண்பணை குரூஉ கொடிய எரிமேய- வளப்பங்குன்றுதலை ஒருகாலத்துமறியாத பெரிய மருதநிலங்களை நிறத்தையுடைய ஒழுங்கினையுடைய நெருப்புண்ண, 156. நாடு எனும் பேர் காடு ஆக-நாடென்னும் பெயர்போய்க் காடென்னும் பெயரைப்பெற, 157. ஆ சேந்த வழி மா சேப்ப-பசுத்திரள் தங்கின இடமெல்லாம் புலி முதலியன தங்க, 158. ஊர் இருந்த வழி பாழ் ஆக-ஊராயிருந்த இடங்களெல்லாம் பாழாய்க்கிடக்க, ஊராரிருந்த இடமென்றுமாம். 159-60. இலங்கு வளை மடம் மங்கையர் துணங்கை அம் சீர்தழூஉ மறப்ப-விளங்குகின்ற வளையினையும் மடப்பத்தினையுமுடைய மகளிர் துணங்கைக்கூத்தினையும் அழகினையுடைய தாளஅறுதியையுடைய, 1குரவைக்கூத்தினையும் மறப்ப, 2தழூஉ : ஆகுபெயர். 161-3. அவை இருந்த பெரு 3பொதியில் கவை அடி கடு நோக்கத்து பேய் மகளிர் பெயர்பு ஆட-4சான்றோரிருந்த பெரிய அம்பலங்களிலே இரட்டையான அடிகளையும் கடியபார்வைகளையுமுடைய பேயாகிய மகளிர் உலாவியாட, 164. அணங்கு வழங்கும் அகல் ஆங்கண்-இல்லுறை தெய்வங்கள் உலாவும் அகன்ற ஊரிடத்து,
1 முருகு. 217, குறிப்புரை. 2 தழூஉ வென்பதற்குக் குரவையென்று இங்கே பொருளெழுதியவாறே, "ஆங்க ணயர்வர் தழூஉ" (கலித். 104:62) என்றவிடத்தும் எழுதுவர். 3 முருகு. 226, ந. 4 சான்றோர்-குடிப்பிறப்பு முதலிய எண்குணங்களமைந்தோர் ; "எட்டுவகை நுதலிய அவையத் தானும்" (தொல். புளத்திணை. சூ. 21) என்பதனுரையாலும், "குடிப்பிறப் புடுத்துப் பனுவல் சூடி, விழுப்பேரொழுக்கம் பூண்டு நாளும், வாய்மை வாய்மடுத்து மாந்தித் தூய்மையின், காதலின் பத்துத் தூங்கித் தீதறு, நடுவுநிலை நெடுநகர் வைகிவைகலு, மழுக்கா றின்மை யாவாஅ வின்மையென, விருபெரு நிதியமுமொருதா மீட்டுந், தோலா நாவின் மேலோர் பேரவை" (ஆசிரியமாலை) என்னும் அதன் மேற்கோளாலும், "குடிப்பிறப்புக் கல்வி" (பு. வெ. 173, மேற்) என்பதனாலும், "அழுக்கா றிலாமை யவாவின்மை, தூய்மை, யொழுக்கங் குடிப்பிறப்பு வாய்மை-இழுக்காத, நற்புலமையோடு நடுவு நிலைமையே, கற்புடைய வெட்டுறுப்புக் காண்" (வீர, மேற்.) என்பதனாலும் அக்குணங்களை யறியலாகும்.
|