177-9. [எழாஅத்தோ, ளிமிழ்ழுழக்கின், மாஅத்தா ளுயர்மருப்பிற், கடுஞ்சினத்த களிறுபரப்பி :] இமிழ் முழக்கின் மா தாள் உயர் மருப்பின் கடு சினத்த களிறு பரப்பி-முழங்குகின்ற ஓசையையும் பெருமையையுடைய கால்களையும் தலைகளேந்தின கொம்புகளையுமுடைய கடியசினத்தவாகிய யானைகளை எங்கும்பரப்பி, 180. [விரிகடல் வியன்றானையொடு:] 1எழா தோள் (177) விரிகடல் வியல் தானையொடு-2முதுகிட்டார்மேற் செல்லாத தோளினை யுடைய விரிகின்ற கடல்போலும் அகற்சியையுடைய படையோடே, 181. முருகு உறழ பகை தலை சென்று-முருகன் பகைவர்மேற் செல்லுமாறுபோலத் தடையறப் பகைவரிடத்தே சென்று, முருகு-தெய்வத்தன்மை ; ஆகுபெயராய் நின்றது. 182. அகல் விசும்பின் ஆர்ப்பு இமிழ-அகன்ற ஆகாயத்தின் கண்ணே படையெழுந்த ஆரவாரமொலிப்ப, விசும்பெனவே ஆகுபெயராய்த் தேவருலகை யுணர்த்திற்று. 183. பெயல் உறழ கணை சிதறி-மழையோடே மாறுபடும்படி அம்புகளைத் தூவி, 184. பல புரவி நீறு உகைப்ப-3பல குதிரைத்திரள் ஓடுகின்ற விசையால் துகள்களை எழுப்ப, 185. வளை நரல-சங்கம் முழங்க, வயிர் ஆர்ப்ப-கொம்பு ஒலிப்ப, 186. பீடு அழிய 4கடந்து அட்டு-பெருமைகெடும்படி வென்று கொன்று,
1 "எழாஅத்துணைத்தோள்-போரில் முதுகிட்டார்மேற் செல்லாத இணை மொய்ம்பு" (பதிற். 90:27, உரை) எனப் பிறரும் இவ்வாறே பொருள் கூறுதல் காண்க. 2 "இகலே கருதிச் சேர்ந்தார் புறங்கண்டு செந்நிலத் தன்றுதிண்டேர்மறித்துப். பேர்ந்தான்", "செந்நிலந் தைச்செருவில், மறிந்தார், புறங்கண்டு நாணியகோன்" (பாண்டிக்கோவை) ; "அழிகுநர் புறக்கொடை யயில்வா ளோச்சாக், கழிதறு கண்மை" (பு. வெ. 55) 3 "மாவெடுத்த மலிகுரூஉத்துகள்" (மதுரைக். 49) 4 "கடந்தடு முன்பு" (கலித். 2:4) என்பதற்கு, "வஞசியாது எதிர்நின்று அடுகின்ற வலி" என நச்சினார்க்கினியரும், "கடந்தடுதானை" (புறநா. 8:5) என்பதற்கு, ‘வஞ்சியாது எதிர்நின்று கொல்லும் படை' என்று அந்நூலுரையாசிரியரும் எழுதிய உரைகள் இங்கே கோடற்குரியன,
|