262-4. இன் குரல் தனி மழை பொழியும் தண் பரங்குன்றில் கலி கொள் சும்மை-இனிய ஓசையினையுடைய துளிகளையுடைய மேகந்தங்கும் குளிர்ந்த திருப்யரங்குன்றில் விழாக்கொண்டாடும் ஆரவாரம், "வயிரியர், முழவதிர்ந் தன்ன முழக்கத் தேறோடு" (அகநா. 328:1-2) என்றார் பிறரும் 264-6. ஒலி கொள் ஆயம் ததைந்த கோதை தாரொடு பொலிய புணர்ந்து உடன் ஆடும் இசையே-புதுநீர்விழவின் ஆரவாரத்தைத் தம்மிடத்தே கொண்ட 1மகளிர்திரள் தம்மிடத்து நெருங்கினகோதை தம் கணவர் மார்பின் மாலையுடனே அழகுபெறக் கூடி அவர்களுடனே நீராடும் ஓசை, 266-7. அனைத்தும் அகல் இரு வானத்து இமிழ்ந்து இனிது இசைப்ப-அவ்வோசை முழுவதூஉம் 2தன்னையொழிந்த பூதங்கள் விரிதற்குக்காரணமாகிய பெருமையையுடைய ஆகாயத்தேசென்று முழங்கி ஆண்டுவாழ்வார்க்கு இனிதாக ஒலிப்ப, 268-9. குருகு நரல மனை மரத்தான் மீன் சீவும் பாண் சேரியொடு-குருகென்னும் பறவைகள் கூப்பிடும்படி மனையிடத்து மரங்கடோறும் மீனைத்திருத்தும் பாணர்குடியிருப்பிற் பாடலாடலால் எழுந்த ஓசையோடே, 270. மருதம் சான்ற-ஊடலாகிய உரிப்பொருளமைந்த, தண்பணை சுற்றி-மருதநிலஞ் சூழப்பட்டு, ஒருசார்-ஒருபக்கம், ஒருசார் (270) சேரியிலோசையோடே (269) ஓதை (258) ஆர்ப்புப் (260) பறையோசை (262) சும்மை (264) இசையாகிய அவ்வோசை முழுவதும் (266) இசைக்கும்படி (267) தண்பணை சுற்றப்பட்டு (270) என்க. 271. சிறு தினை கொய்ய-சிறியதினையையறுக்க, 3கவ்வை கறுப்ப-எள்ளிளங்காய் முற்ற, 272. கரு கால் வரகின் இரு குரல் புலர-கரியதாளினையுடைய வரகினது கரிதாகிய கதிர் முற்ற,
1 "மைந்தர் கண்ணி மகளிர் சூடவும், மகளிர் கோதை மைந்தர் மலையவும்" (பட்டினப். 109-10) ; "மகளிர் கோதை மைந்தர் புனையவும், மைந்தர் தண்டார் மகளிர் பெய்யவும்" (பரி. 20:20-21) 2 பெரும்பாண். 1, உரையையும் அதன் குறிப்புரையையும் பார்க்க. 3 கவ்வை-எள்ளிளங்காய் ; மலைபடு, 105, ந.
|