273. ஆழ்ந்த குழும்பில் திரு மணி கிளர-ஆழ்ந்தகுழியிலே திருவினையுடைய மணிகிடந்து விளங்க, 274-6. [எழுந்த கடற்றி னன்பொன் கொழிப்பப், பெருங்கவின் பெற்ற சிறுதலை நௌவி, மடக்கட் பிணையொடு மறுகுவன வுகள :] பெரு கவின் பெற்ற சிறுதலை நௌவி எழுந்த கடற்றில் நல் பொன் கொழிப்ப மடம் கண் பிணையொடு மறுகுவன உகள-பெரிய அழகைப்பெற்ற சிறியதலையினையுடைய நௌவிமான் வளர்ந்தகாட்டில் மாற்றற்ற பொன் மேலேயாம்படி மடப்பத்தையுடைத்தாகிய கண்ணினையுடைய பிணையோடே சுழல்வனவாய்த் துள்ள, 277. சுடர் பூ கொன்றை தாஅய நீழல்- ஒளியினையுடையவாகிய பூக்களையுடைய கொன்றைபரந்த நிழலிடத்தே, 278. பாஅயன்ன பாறை அணிந்து-பரப்பினாலொத்த பாறை அழகுபெற்று, 279-81. [நீலத் தன்ன பைம்பயிர் மிசைதொறும், வெள்ளியன்ன வொள்வீ யுதிர்ந்து, சுரிமுகிழ் முசுண்டையொடு முல்லை தாஅய் :] நீலத்து அன்ன பைம்பயிர் மிசைதொறும் சுரி முகிழ் முசுண்டையொடு முல்லை வெள்ளி அன்ன ஒள் வீ உதிர்ந்து தாஅய்-நீலமணியையொத்த பசிய பயிர்களினிடங்டோறும் முறுக்குண்ட அரும்புகளையுடைய முசுண்டையுடனே முல்லையினுடைய வெள்ளியினிறத்தையொத்த ஒள்ளியபூக்கள் உதிர்ந்து பரந்து, 282-4. [மணிமரு ணெய்த லுறழக் காமர், துணிநீர் மெல்லவற்றொய்யிலொடு மலர, வல்லோன் றைஇய வெறிக்களங் கடுப்ப :] வல்லோன் தைஇய வெளி களம் கடுப்ப காமர் துணி நீர் மெல் அவல் மணி மருள் நெய்தல் தொய்யிலொடு உறழ மலர-இழைத்தல்வல்லவன் இழைத்த வெறிக்கூத்தையுடைய களத்தையொப்ப விருப்பத்தையுடைய தெளிந்த நீரையுடைத்தாகிய நெகிழ்ந்த பள்ளத்திலே நீலமணியென்று மருளும் நெய்தல் தொய்யிற்கொடியோடே மாறுபட மலர, 285. முல்லை சான்ற புறவு அணிந்து ஒருசார்-1இருத்தலாகிய உரிப்பொருளமைந்த காடுசூழ்ந்து ஒருபக்கம், ஒருசார் (285) அணிந்து (278) தாஅய்க் (281) கொய்யக் கறுப்பப் (271) புலரக் (272) கிளர (273) உகள (276) மலரப் (283) புறவுசூழப் பட்டு (285) என முடிக்க. "பன்முறையானும்" (தொல். வினை. சூ. 36) என்பதனாற் பலவினையெச்சம் விராஅய் அடுக்கி அணிந்தென்னும் வினைகொண்டன.
1 சிறுபாண். 169 குறிப்புரையைப் பார்க்க.
|