368

286-7. நறு காழ் கொன்று கோட்டின் வித்திய குறு கதிர் தோரை- 1நறியஅகிலையும் சந்தனத்தையும்வெட்டி மேட்டுநிலத்தே விதைத்த குறிய கதிர்களையுடைய தோரைநெல்லும்,

287. நெடு கால் ஐயவி-நெடியதாளினையுடைய வெண்சிறுகடுகும்,

288. 2ஐவனம் வெள் நெல்லொடு அரில் கொள்பு நீடி-ஐவன நெல்லென்னும் வெள்ளிய நெல்லோடே பிணக்கங்கொண்டு வளரப்பட்டு,

289-90. இஞ்சி மஞ்சள் பைங்கறி பிறவும் பல்வேறு தாரமொடு கல் அகத்து ஈண்டி-இஞ்சியும் மஞ்சளும் பசுத்த மிளகுகொடியும், ஒழிந்த பலவாய் வேறுபண்ட பண்டங்களும் கற்றரையிடத்தே குவியப்பட்டு,

291. தினை விளை (பி-ம். தினைவளர்) சாரல் கிளி கடி பூசல் -தினையும் விளையப்படுகின்ற மலைப்பக்கத்திற் படியும் கிளியை ஓட்டும் ஆரவாரம்,

நீடி ஈண்டியென்னுந் செய்தெனெச்சங்கள் விளையுமென்னும் பிறவினை கொண்டன, 3"அம்முக் கிளவி" என்னும் சூத்திரவிதியால்.

292-3. மணி பூ அவரை குரூஉ தளிர் (பி-ம். குரூஉத்திரள்) மேயும் ஆமா கடியும் கானவர் பூசல்-பன்மணிபோலும் பூவினையுடைய அவரையினது நிறவிய தளிரைத் தின்னும் ஆமாவையோட்டுங் கானவருடைய ஆரவாரம்,

294-5. சேணோன் அகழ்ந்த மடி வாய் பயம்பின் வீழ் முகம் (பி-ம். விழுமுகக்) கேழல் அட்ட பூசல்-மலைமிசையுறையுங் குறவன் கல்லப்பட்ட மூடின வாயையுடைய பொய்க்குழியிலே விழும் பக்குவத்தினையுடைய ஆண்பன்றியைக் கொன்றதனாலுண்டான ஆரவாரம்,

சேணோன் அகழ்ந்த பயம்பு-இழிகுலத்தோனாகியவன் அகழ்ந்த பயம்பென்பாருமுளர்.


1 "நறைபடர் சாந்த மறவெறிந்து நாளால், உறையெதிர்ந்து வித்தியவூ ழேனல்" (திணைமாலை. 1)

2 ஐவனமும் வெண்ணெல்லும் ஒன்றென்பது தோன்ற, "ஐவன வெண்ணெல்" (கலித். 43:4) என்பதற்கு, ‘ஐவனமாகிய வெண்ணெல்லை' என்று இங்கே கூறியவாறே நச்சினார்க்கினியர் உரையெழுதியுள்ளார் ; ஆயினும், "ஐவனம் வெண்ணெல்" (மலைபடு. 115) என்ற அடியும் அதற்கு இவர், ‘ஐவனநெல்லும் வெண்ணெல்லும்' என உரை கூறியிருப்பதும் அவ்விரண்டும் வேறென்று பொருள் கொள்ளச் செய்கின்றன ; இவை ஆராய்ச்சிக்குரியன.

3 "அம்முக் கிளவியுஞ் சினைவினை தோன்றிற், சினையொடு முடியா முதலொடு முடியினும், வினையோ ரனைய வென்மனார் புலவர்" (தொல். வினை. சூ. 34)