303. நிழத்த யானை மேய் புலம் படர-ஓய்ந்த யானைகள் தமக்கு மேயலாமிடங்களிலே போக, 304. கலித்த இயவர் இயம் 1தொட்டன்ன-மகிழ்ந்த வாச்சியக்காரர் தம் வாச்சியத்தை வாசித்தாலொத்த, 305. கண் விடுபு உடையூ தட்டை கவின் அழிந்து-மூங்கிலின் கண் திறக்கப்பட்டு உடைந்து இயம் தொட்டன்ன (304) ஓசையையுடைய தட்டை அழகு அழிகையினாலே, தட்டப்படுதலிற் றட்டையென்றார். நெருப்பு நைக்கையினாலே (302) பயிரின்றித் தட்டை கவினழிகையினாலே (305) ஓய்ந்தயானை மேய்புலம் படரும்படி (303) அருவியான்ற மலை (306) யென்க. கவினழியவெனத் திரித்துமுடித்தலுமாம். 306. அருவி ஆன்ற அணி இல் மா மலை-அருவிகளில்லையான அழகில்லாத பெரிய மலையிடத்து விடரகம் (308), 307. வை கண்டன்ன புல் முளி அம் காட்டு-வைக்கோலைக் கண்டாற் போன்ற 2ஊகம்புல்லுலர்ந்த அழகிய காட்டிடத்தில், 308. கம சூழ் 3கோடை விடர் அகம் முகந்து-நிறைவினையுடைய 4சூறாவளியை முழைஞ்சிடங்கள் முகந்துகொள்கையினாலே, 309. கால் உறு கடலின் ஒலிக்கும் சும்மை-காற்றுமிகுந்த கடல் போல் ஒலிக்கும் ஆரவாரத்தையுடைய வேனிற்குன்றம் (313), 310-11. இலை வேய் குரம்பை உழை அதள் பள்ளி உவலை கண்ணிவல் சொல் 5இளைஞர்-குழையாலேவேய்ந்த குடிலிலிருக்கும் மான்றோலாகிய படுக்கையினையும், தழைவிரவின கண்ணியினையும் கடியசொல்லினையுமுடைய இளையோர், 312. சிலை உடை கையர் கவலை காப்ப-வில்லையுடைய கையையுடையராய்ப் பலவழிகளில் ஆறலைகள்வரைக் காக்கும்படி சுரஞ்சேர்ந்து (314) என்க.
"அமைத்தரு கனலென" (கம்ப. கரன்வதை.66, திருவடி. 40) ; "மூங்கிலிற் பிறந்து முழங்குதீ மூங்கின் முதலற முருக்குமா போல" (உத்தர. இலவணன். 29); "தீக்குப் பிறந்தவில் லென்னும், வேய்க்குச் சிறப்பென்கொல் வேறே" (தக்க. 304) ; "கிளை தம்மிலுற்ற செம்மைக்கனலான் முடிவுற்றிடுஞ் செய்கையேபோல்" (கந்த. மகாசாத்தாப். 17) 1 (பி-ம்.) ‘தொட்டென்ன' 2 ஊகம்புல் : பெரும்பாண். 122. 3 (பி-ம்.) ‘கொட்டை' 4 சூறாவளி-சுழல் காற்று ; "சூறாவளி வைகிய சூழலின்வாய்" (கந்த. காமதகனப். 2) 5 (பி-ம்.) ‘இளையர்'
|