371

313. நிழல் உரு இழந்த வேனில் குன்றத்து-நிழல் தன்வடிவையிழத்தற்குக் காரணமான முதுவேனிற்காலத்தையுடைய மலையிடத்துச் சுரம் (314),

314-பாலை சான்ற-பிரிவாகிய உரிப்பொருளமைந்த,

சுரம் சேர்ந்து-அருநிலஞ் சேரப்பட்டு,

ஒருசார்-ஒருபக்கம்,

ஒருசார் (314), மலை (306) விடரகம் கோடையை முகக்கையினாலே (308) கடலினொமக்குஞ் சும்மையையுடைய (309) வேனிற்குன்றத்துப் (313) பாலைசான்ற சுரஞ்சேரப்பட்டு (314) என்க.

பாலைக்கு 1நடுவணதென்னும் பெயர்கூறியவதனால், அது தத்தம் பொருளானும், "முல்லையுங் குறிஞ்சியு முறைமையிற் றிரிந்து, நல்லியல் பழிந்து நடுங்குதுய ருறுத்துப், பாலை யென்பதோர் படிவங் கொள்ளும்" (சிலப். 11:64-6) என 2முதற் பொருள்பற்றிப் பாலை நிகழ்தலானும் பாலையையும் வேறோர் நிலமாக்கினார்.

315. முழுங்கு கடல் தந்த 3விளங்கு கதிர் முத்தம்-ஒலிக்குங்கடல் தந்த விளங்குகின்ற ஒளியினையுடைய முத்து,

316. அரம் போழ்ந்து அறுத்த கண் நேர் இலங்கு வளை-4வாளரம் கீறியறுத்த இடம் நேரிதாகிய விளங்கும்வளை,
நேர்ந்தவளையுமாம்.

317. பரதர் தந்த பல் வேறு கூலம்-செட்டிகள் கொண்டுவருதலால் மிக்க பலவாய் வேறுபட்ட பண்டங்கள்,


1 நடுவணதென்னும் பெயர் பாலைக்குண்மையையும் அப்பெயர்க் காரணத்தையும், "அவற்றுள், நடுவ ணைந்திணை நடுவண தொழிய" (தொல். அகத். சூ. 2) என்பதன் உரையாலுணரலாகும்.

2 முதற்பொருளென்றது ஈண்டு நிலமாகிய முதற்பொருளை.

3 கடல்முத்து, சிறந்ததாகலின் ‘விளங்கு கதிர் முத்தம்' என இங்கே அதனைச் சிறப்பித்தார் ; "தலைமை பொருந்திய வெள்ளிய முத்துக்கள்..................... கடலினிடத்தே பிறந்தனவாயினும்" (கலித். 9:15-6, ந.), "உவரிமுத்தென்றது எட்டிடத்திலும் சிறப்புடையவிடம் கடலாகையாலெனவுணர்க" (தக்க. 181, உரை) என்பன இக்கருத்தை வலியுறுத்தும்.

4 "விலங்கரம் பொருத சங்கின் வெள்வளை" (சீவக. 2441) என்பதனையும், ‘வளைந்த வாளரமறுத்த சங்கவளை ' (ந.) என்ற அதன் உரையையுங் காண்க; "வாளரந் துடைதத கைவேல்" (சீவக. 461) என்ற விடத்து, ‘வாளரம்-அரவிசேடம்' என்றெழுதியுள்ள உரை இங்கே கோடற்குரியது.