376

354. நெய் பட கரிந்த திண் போர் கதவின்-நெய் பலகாலுமிடுதலாற் கருகின திண்ணிய செருவினையுடைய கதவினையும்,

1வாயிலில் தெய்வமுறையுமாகலின், அதற்கு அணியும்நெய்யுமாம் ; "ஐயவி யப்பிய நெய்யணி நெடுநிலை" (நெடுநல். 86) என்பதனானுணர்க.

355. மழை ஆடும் மலையின் நிவந்த மாடமொடு-மேகமுலாவும் மலைபோல ஓங்கினமாடத்தோடே,

கோபுரமின்றி வாசலை மாடமாகவும் சமைத்தலின், மாடமென்றார்.

356. வையை அன்ன வழக்கு உடை வாயில்-2வையையாறு இடைவிடாது ஓடுமாறுபோன்ற மாந்தரும் மாவும் இடையறாமல் வழங்குதலையுடைய வாயில்,

மாடத்தோடே (355) நிலையினையும் (353) கதவினையும் (354) வழக்கினையுமுடைய வாயில் (356)

பெரும்பாணிருக்கையினையும் (342) கிடங்கினையும் (351) புரிசையினையும் (352) வாயிலினையு (356) முடைய மதுரை (699) என்க.

357-8. வகை பெற எழுந்து வானம் மூழ்கி சில் காற்று இசைக்கும் பல் புழை நல் இல்-கூறுபாடாகிய பெயர்களைத் தாம்பெறும்படியுயர்ந்து தேவருலகிலே சென்று தென்றற்காற்று ஒலிக்கும் பலசாளரங்களையுடைய நன்றாகிய அகங்களையும்,

மண்டபம் கூடம் தாய்க்கட்டு அடுக்களையென்றாற் போலும் பெயர்களைப் பெறுதலின், வகைபெறவெழுந்தென்றார்.

359. யாறு கிடந்தன்ன அகல் நெடு தெருவில்-யாறுகிடந்தாற்போன்ற அகன்ற நெடிய தெருக்களிலே,
இருகரையும் யாறும்போன்றன, இரண்டு பக்கத்தின்மனைகளும் தெருவுகளும்.

360. பல் வேறு குழாஅத்து இசை எழுந்தும் ஒலிப்ப-3நாளங்காடியிற் பண்டங்களைக்கொள்ளும் பலசாதியாகிய பாடைவேறுபாட்டை


1 "ஐயவி யப்பிய நெய்யணி நெடுநிலை" (நெடுநல். 86) என்பதன் விசேடவுரையில், ‘அதில் தெய்வத்திற்கு வெண்சிறுகடுகும் நெய்யு மணிந்தது' என்று எழுதியிருப்பது இதனோடு ஒப்பிடற்பாலது.

2 "வையை யென்ற பொய்யாக் குலக்கொடி" (சிலப். 13:170); "வருபுனல்வையை-இடையறாது பெருகும் "புனலையுடையவையை யாற்றுத்துறை", "நீடுநீர் வையை-ஒழுக்கறாத நீரையுடைய வையையாறு" (சிலப். 14:72, 18:4, அடியார்.)

3 நாளங்காடி-காலைக்கடை : மதுரைக். 430 ; "நடுக்கின்றி நிலைஇய நாளங்காடியில்", "நாண்மகிழிருக்கை நாளங்காடி" (சிலப். 5:63, 196)