வையத்தே ஒருதாமாகி (470) உறையும் (473) பள்ளியும் (474) என முடிக்க. 475-6. வண்டு பட பழுநிய தேன் ஆர் தோற்றத்து பூவும் புகையும்1சாவகர் பழிச்ச-வண்டுகள் படியும்படி பருவமுதிர்ந்த தேனிருந்த தோற்றத்தையுடைய பூக்களையும் புகையினையுமேந்தி விரதங்கொண்டோர் துதிக்க, 477-83. [சென்ற காலமும் 2வரூஉ மமயமு, மின்றிவட் டோன்றிய வொழுக்கமொடு நன்குணர்ந்து, வானமு நிலனுந் தாமுழு துணரும், சான்ற கொள்கைச் சாயா யாக்கை, யான்றடங் கறிஞர் செறிந்தனர் நோன்மார், கல்பொளிந் தன்ன விட்டுவாய்க் கரண்டைப், பல்புரிச் சிமிலி நாற்றி நல்குவர :] சென்ற காலமும் வரூஉம் அமயமும் (477) இன்று இவண் தோன்றிய ஒழுக்கமொடு நன்கு உணர்ந்து (478) நல்குவர (483)-சென்ற காலத்தையும் வருகின்ற காலத்தையும் இன்று இவ்வுலகில் தோன்றி நடக்கின்ற ஒழுக்கத்தோடே மிகவுணர்ந்து உலகத்தார்க்குச் சொல்லுதல் வரும்படி, வானமும் நிலனும் தாம் முழுது உணரும் (479) அறிஞர் (481)-தேவருலகையும் அதன் செய்கைகளையும் எல்லாநிலங்களின் செய்திகளையும் தாம் நெஞ்சால் அறிதற்குக் காரணமான அறிஞர், இஃது எதிர்காலங்கூறிற்று. சான்ற கொள்கை (480)-தமக்கமைந்த விரதங்களையும், சாயா யாக்கை (480)-அவ்விரதங்களுக்கு இளையாத மெய்யினையும் உடைய அறிஞர் (481), ஆன்று அடங்கு அறிஞர் (481)-கல்விகளெல்லாம் நிறைந்து களிப்பின்றி அடங்கின அறிவினையுடையார், 3செறிந்தனர் (481)-நெருங்கினவருடைய சேக்கை (487) என்க. நோன்மார் (481)-நோற்கைக்கு, கல் பொளிந்தன்ன இட்டு வாய் கரண்டை (482) பல் புரி சிமிலி நாற்றி (483)-கல்லைப் பொளிந்தாற்போன்ற இட்டிய வாயையுடைய 4குண்டிகையைப் பல வடங்களையுடைய தூலுறியிலே தூக்கிச் செறிந்தன (481) ரென்க.
1 சாவகர்-சைனரில் விரதங்காக்கும் இல்லறத்தார் ; இவர் உலக நோன்பிகளெனவும் கூறப்படுவர் ; சிலப். 15:153. 2 (பி-ம்.) ‘வரூஉஞ்சமயமும்' 3 (பி-ம்.) ‘செறிநர்' 4 "உறித்தாழ்ந்த கரகமும்" (கலித். 9:2); "உறித்தாழ் கரகம்" (சிலப். 30:64, 90)
|