484. கயம் கண்டன்ன-1குளிர்ச்சியாற் கயத்தைக் கண்டாற் போன்ற, வயங்கு உடை நகரத்து-விளங்குதலையுடைய கோயிலிடத்துச் சேக்கை (487) என்க. 485. செம்பு இயன்றன்ன செ சுவர் புனைந்து-செம்பாற் செய்தாலொத்த செவ்விய சுவர்களைச் சித்திருமெழுதி, 486. நோக்கு விசை தவிர்ப்ப மேக்கு உயர்ந்து-கண் பார்க்கும் விசையைத் தவிர்க்கும்படி மேல்நிலமுயர்ந்து, 486-8. [ஓங்கி, யிறும்பூது சான்ற நறும்பூஞ் சேக்கையும், குன்று பல குழீஇப் பொலிவன தோன்ற :] குன்று பல குழீஇ பொலிவான தோன்ற ஓங்கி-மலைகள் பலவும் திரண்டு பொலிவனபோலத் தோன்ற உயர்ந்து வயங்குடை நகரம் (484) என்க. இறும்பூது சான்ற நறு பூ சேக்கையும்-அதிசயம் அமைந்த நறிய பூக்களைச் சூழவுடைய அமணப்பள்ளியும், சேக்கப்படும் இடத்தைச் சேக்கை யென்றார். இவர்கள் வருத்த மறப்பறித்து வழிபடுதற்குப் பல பூக்களைச் சூழ ஆக்குதலின் நறும்பூஞ் சேக்கை யென்றார். புனைந்து (485) உயர்ந்து (486) தோன்ற (488) ஓங்கிச் (486) சாவகர் பழிச்ச (476) வயங்குதலையுடைய நகரத்திடத்துக் (484) கொள்கையினையும் யாக்கையினையுமுடைய (480) அறிஞர் (481) உணர்ந்து (478) நல்குவர (483) நோன்மார் (481) சிமிலியிலேநாற்றிச் (483) செறிந்தனருடைய (481) சேக்கையுமெனக் கூட்டுக. 489. அச்சமும்-நடுவாகக்கூறுவரோ கூறாரோவென்று அஞ்சி வந்த அச்சத்தையும், அவலமும்-அவர்க்குத் தோல்வியால் நெஞ்சிற்றோன்றும் வருத்தத்தையும், ஆர்வமும் நீக்கி-அவர்தம் நெஞ்சுகருதின பொருள்கண் மேற்றோன்றின பற்றுள்ளத்தினையும் போக்கி, என்றது, அவர்கள் நெஞ்சுகொள்ள விளக்கியென்றவாறு. 490. செற்றமும் உவகையும் செய்யாது காத்து-ஒரு கூற்றிற் செற்றஞ் செய்யாமல் ஒருகூற்றில் உவகை செய்யாமல் நெஞ்சினைப் பாதுகாத்து,
1 "கயம்புக் கன்ன பயம்படு தண்ணிழல்" (மலைபடு. 47) என்பதன் குறிப்புரையைப் பார்க்க.
|