398

523-5. கொடு பறை கோடியர் கடும்பு உடன் வாழ்த்தும் தண் கடல் நாடன் ஒள் பூ கோதை பெரு நாள் இருக்கை-கண்கள்வளைந்த பறையினையுடைய கூத்தருடைய சுற்றம் சேரவாழ்த்தும் குளிர்ந்த கடல் சேர்ந்த நாட்டையுடையவனாகிய ஒள்ளிய பனந்தாரையுடைய சேரனுடைய பெரியநாளோலக்க இருப்பிலே,

525-6. விழுமியோர் குழீஇ விழைவு கொள் கம்பலை கடுப்ப கல்லென (538) எல்லாக்கலைகளையுமுணர்ந்த சீரியோர் திரண்டு அவன் கேட்பத்1தருக்கங்களைக்கூறி விரும்புதல்கொண்ட ஆரவாரத்தையொப்பக் கல்லென்ற ஓசை நடக்க,

பலசமயத்தோரும் தம்மிற்றாம் மாறுபட்டுக்கூறுந் தருக்கத்தைச் சேரக் கூறக் கேட்டிருக்கின்ற2கம்பலைபோலவென்றார்.

526. பலவுடன்-கூறாதன பலவுற்றுடனே,

527. சேறும் நாற்றமும் பலவின் சுளையும்-தேனும் நாற்றமும் உடையவாகிய பலாப்பழத்தின் சுளையும்,

சேறென்றார், சுளையிலிருக்கின்ற தேனை.

528. வேறு பட கவினிய 3தேம் மா கனியும்-வடிவு வேறுபட அழகுபெற்ற இனிய மாவிற்பழங்களையும்,

‘சேறு நாற்றமும் வேறுபடக் கவினிய, பலவின் சுளையுந் தேமாங் கனியும்' என்றும் பாடம்.

529. பல் வேறு உருவிற் காயும்-பலவாய் வேறுபட்ட வடிவினையுடைய பாகற்காய் வாழைக்காய்4வழுதுணங்காய் முதலியகாய்களையும்,

பழனும்-வாழைப்பழம் முந்திரிகைப்பழமுதலிய பழங்களையும்,

530-31. கொண்டல் வளர்ப்ப கொடி விடுபு கவினி மெல் பிணி அவிழ்ந்த குறு முறி அடகும்-மழை பருவத்தே பெய்து வளர்க்கையினாலே கொடிகள்விட்டு அழகுபெற்று மெல்லிய சுருள்விரிந்த சிறிய இலைகளையுடைய இலைக்கறிகளையும்,

கொடியென்றார், ஒழுங்குபட விடுகின்ற கிளைகளை.

532. [அமிர்தியன் றன்ன தீஞ்சேற்றுக் கடிகையும் :] தீ சேறு அமிர்து இயன்றன்ன கடிகையும்-இனிய பாகினாற்கட்டின அமிர்தம் தேறாகநீண்டாற்போன்ற கண்டசருக்கரைத் தேற்றையும்,

533. புகழ் படி பண்ணிய பெரு ஊன் சோறும்-புகழ்ச்சிகள் உண்டாகச்சமைத்த பெரிய இறைச்சிகளையுடைய சோற்றையும்,


1 சேரனவையுந் தருக்கமும் : மணி. 26:63-4.

2 "கல்வியிற் றிகழ்கணக் காயர் கம்பலை" என்றார் கம்பரும்.

3 தேமாவென்பது மாவில் ஒரு சாதியென்பர்.

4 வழுதுணங்காய்-கத்தரிக்காய் ; "வழுதுணங்காய் வாட்டும்" (தனிப்.)