401

545-6. [ஒண்சுட ருருப்பொளி மழுங்கச் சினந்தணிந்து சென்ற ஞாயிறு :] ஒள் சுடர் உருப்பு ஒளி சினம் தணிந்து மழுங்க சென்ற ஞாயிறு-ஒள்ளிய கிரணங்களையுடைய வெப்பத்தையுடைய ஒளி சினம் மாறிக் குறையும்படி ஒழுகப்போன ஞாயிறு,

546-7. நல் பகல் கொண்ட குடமுதல் குன்றம் சேர-பின்னர் நன்றாகிய பகற்பொழுதைச் சேரக்கொண்டு மேற்றிசையிடத்து அத்த கிரியைச் சேருகையினாலே,

547-9. குணமுதல் நாள் முதிர் மதியம் தோன்றி நிலா விரிபு பகல் உரு உற்ற இரவு வர-கீழ்த்திசையிடத்தே பதினாறுநாட்சென்று முதிர்ந்த நிறைமதி எழுந்து நிலாப்பரக்கையினாலே பகலின்வடிவையொத்த இராக்காலம் வரும்படி,

549. நயந்தோர்-கணவர்பிரிதலிற் கூட்டத்தை விரும்பியிருந்தார்க்கு,

550. காதல் இன் துணை புணர்மார்-தம்மேற் காதலையுடைய தமக்கு இனிய கணவரைக்கூடுதற்கு,

550-51. ஆய் இதழ் தண் நறு கழுநீர் துணைப்ப-ஆராய்ந்த இதழ்களையுடைய குளிர்ந்த நறிய செங்கழுநீர்களை மாலைகட்டும்படியாக,

551. இழை புனையூஉ-அணிகளை யணிந்து,

552. நல் நெடு கூந்தல் நறு விரை குடைய-நன்றாகிய நெடிய மயிரிற் பூசின நறிய மயிர்ச்சந்தனத்தை அலைத்து நீக்கும்படியாக,

553. நரந்தம் அரைப்ப-கத்தூரியை அரைக்கும்படியாக,

நறு சாந்து 1மறுக-நறிய சந்தனம் அரைக்கும்படியாக,

554. மெல் நூல் கலிங்கம் கமழ் புகை மடுப்ப-மெல்லிய நூலாற் செய்த கலிங்கங்களுக்கு மணக்கின்ற அகிற்புகையை ஊட்டும்படியாக,

555-6. பெண் மகிழ்வு உற்ற பிணை நோக்கு மகளிர் நெடு சுடர் விளக்கம் கொளீஇ-குணச்சிறப்பால் 2உலகத்துப்பெண்சாதி விருப்பமுற்ற மான்பிணைபோலும் நோக்கினையுடைய மகளிர் நெடிய ஒளியினையுடைய விளக்கினையேற்றி,

556-8. [நெடுநக, ரெல்லை யெல்லா நோயொடு புகுந்து, கல்லென் மாலை நீங்க :]

நெடு நகர் எல்லை எல்லாம்-பெரிய ஊரினெல்லையாகிய இடமெல்லாம்,


1 மறுக -அரைக்க ; நெடுநல். 50, ந.

2 "பெண்டிரு மாண்மை வெஃகிப் பேதுறு முலையினாளை", "ஆண் விருப் புற்று நின்றா ரவ்வளைத் தோளி னாரே" (சீவக. 587, 2447) என்பவற்றின் குறிப்புரைகளைப் பார்க்க.