403

நீர்திரண்டாற்போன்ற வெள்ளியபூக்களாற்செய்த மாலைகளை அகற்சியையுடைய விசும்பிலேசென்று நாறும்படி கொண்டையிலே முடித்து,

563. ஆய் கோல் அவிர் தொடி விளங்க வீசி-அழகிய திரட்சியையுடைய விளங்குகின்ற தொடி மிகவிளங்கும்படி கையைவீசி மனை தொறுஞ் சென்று பொய்தலயர (589) என்க.

564. போது அவிழ் புது மலர் தெரு உடன் கமழ-அலரும்பருவமாக மலர்ந்த புதிய விடுபூக்கள் தெருவுகளெங்கும் நாற,

565. மே தகு தகைய மிகு நலம் எய்தி-முற்படப் பலருடன் புணர்ந்த புணர்ச்சியாற்குலைந்த ஒப்பனைகளைப் பின்னும் பெருமைதருகின்ற அழகினையுடைய மிகுகின்ற நன்மையுண்டாக ஒப்பித்து,

566-7. [பெரும்பல் குவளைச் சுரும்புபடு பன்மலர், திறந்துமோந்தன்ன சிறந்துகமழ் நாற்றத்து :]

திறந்து மோந்தன்ன சிறந்து கமழ் நாற்றத்து-அலர்கின்ற பருவத்தே1கையாலலர்த்தி மோந்துபார்த்தாலொத்த மிக்குநாறுகின்ற நாற்றத்தினையுடைய,

பெரு பல் குவளை சுரும்பு படு பல் மலர்-பெரிய பலவாகிய செங்கழுநீரிற் சுரும்புகளுக்கு அலர்கின்ற பலபூக்களையும்,

568. [கொண்டன் மலர்ப்புதன் மானப் பூவேய்ந்து :]

கொண்டல் மலர் புதல் மான வேய்ந்து-மழைக்குமலர்ந்த மலரையுடைய சிறுதூற்றையொக்கச் சூடி,

பூ-ஏனைப்பூக்களையும்,

பலநிறத்துப்பூக்களை நெருங்கப்புனைதல்பற்றிச் சிறுதூற்றை உவமை கூறினார்.

569-72. [நுண்பூ ணாகம் வடுக்கொள முயங்கி, மாயப் பொய்பல கூட்டிக் கவவுக் கரந்து, சேயரு நணியரு நலனயந்து வந்த, விளம்பல் செல்வர் வளந்தப வாங்கி :]

சேயரும் நணியரும் நலன் நயந்து வந்த (571) இள பல் செல்வர் (572)-புறமண்டலத்தாரும் உள்ளூரிலுள்ளாருமாய்த் தம்முடைய வடிவழகை விரும்பிவந்த இளையராகிய பல செல்வத்தையுடையாரை,

பல மாயம் பொய் கூட்டி (570) நுண் பூண் ஆகம் வடு கொள முயங்கி (569)-பல வஞ்சனைகளையுடைய பொய்வார்த்தைகளாலே முதற்கூட்டிக்கொண்டு அவருடைய நுண்ணிய பூண்களையுடைய மார்பைத் தம்மார்பிலே வடுப்படும்படியாக முயங்கிப் பின்னர்,


1 முருகு. 198-9, குறிப்புரையைப் பார்க்க.