582-3. கண்டோர் நெஞ்சு நடுக்கு உறூஉ கொண்டி மகளிர்-தம்மைக் கண்டோருடைய நெஞ்சை வருத்தமுறுவித்துப் பொருள் வாங்குதலையுடைய பரத்தையர், 584-5. [யாம நல்யாழ் நாப்ப ணின்ற, முழவின் மகிழ்ந்தன ராடி :] யாமம் நல் யாழ் நாப்பண் தாழ்பு அயல் கனை குரல் கடுப்ப (560) நின்ற முடிவின் மகிழ்ந்தனர் ஆடி-முதற்சாமத்தில் வாசித்தற்குரிய நன்றாகிய யாழ்களுக்கு நடுவே அவற்றிற்கேற்பத் தாழ்ந்து தம் வயிற்செறிந்த ஓசையையொக்க நின்ற முழவாலே மனமகிழ்ந்தாடி, தாழ்பயற் கனைகுரல் கடுப்ப (560) என்று முன்னர்வந்ததனை இவ்விடத்துக் கூட்டுக. 585-6. குண்டு நீர் பனி துறை குவவு மணல்-ஆழ்ந்த நீரினையுடைய குளிர்ந்த துறையிடத்துக் குவிந்த மணலிலே, முனைஇ-வெறுத்து, 586-7. [மென்றளிர்க். கொழுங்கொம்பு கொழுதி :] கொழுகொம்பு மெல் தளிர் கொழுதி கொழுவிய கொம்புகளினின்ற மெல்லிய தளிர்களைப் பறித்து, 587-8. [நீர்நனை மேவர, நெடுந்தொடர்க் குவளை வடிம்புற வடைச்சி :] குவளை நீர் நனை மேவர நெடு தொடர் வடிம்பு உற1அடைச்சி-குவளையை 2நீர்க்கீழரும்புகளோடே பொருந்துதல்வரக் கட்டின நெடியதொடர்ச்சியை வடிம்பிலே விழும்படி உடுத்து, 589. மணம் கமழ் மனை தொறும் பொய்தல் அயர-மணநாறுகின்ற மனைதோறும் சென்று பொருள் தருதற்குரிய இளையரோடு விளையாடுதலைச்செய்ய, அங்ஙனம் விளையாடி வசிகரித்து உறவுகொண்டு பொருள்வாங்குதல் அவர்க்கு இயல்பு. வானவமகளிர்மான (582) நெஞ்சுநடுக்குறூஉக் கொண்டிமகளிர் (583) பலருடன்றுவன்றிக் (580) குவவுமணலிலே (586) முழவின் மகிழ்ந்தனராடி (585) அதனைமுனைஇக் (586) குவளையையடைச்சிக் (588) கோதையை (562) விசும்புகமழப் (561) பிறக்கிட்டு (562) இளம் பல்செல்வரைக் (572) கூட்டி (570) முயங்கிப் (569) பின்னர்க் கவவுக் கரந்து (570) வளந்தபவாங்கித் (572) தாதுண்டுதுறக்கும் (573) வண்டினமான (574) இன்றுயில்துறந்து (575) பின்னரும் மிகுநலமெய்திச் (565) சுரும்புபடுபன்மலரையும் (566) ஏனைப்பூக்களையும் புதன்மான வேய்ந்து (568) புதுமலர் தெருவுடன் கமழத் (564) தொடியைவீசி (563)
1.அடைச்சி -செருகி ; சிலப். 14:77, அடியார். 2."கீழ்நீர்ச் செவ்வரும்பு" (முருகு. 29)
|