409

பெரு தோள் சாலினி மடுப்ப-பெரிய தோளினையுடைய1தேவராட்டியோடே மடுப்ப,

வளமனைமகளிர் சிலர் (603) புதல்வர்ப்பயந்து (600) புனிறுதீர்ந்து (602) குளநீராடுதலாலே (603) அதுகண்டு கடுஞ்சூன்மகளிர் பேணிக் (609) குறைதீர்ந்தபின் பொலிந்தசுற்றத்தோடே (602) பலவுடன் (606) சாலினியோடே (610) பண்ணி (604) ஒன்றி (605) இரட்ட (606) இயலிச்சென்று (608) கைதொழுது (609) மடையை (607) மடுப்ப (610) எனக்கூட்டுக.

610. ஒருசார்-ஒருபக்கம்,

611. அரு கடி வேலன் முருகொடு வளைஇ-அரிய2அச்சத்தைச் செய்யும் வேலன் இவ்விடுக்கண் முருகனால்வந்ததெனத் தான்கூறிய சொல்லின்கண்ணே கேட்டோரை வளைத்துக்கொண்டு,

பிள்ளையார்வேலை யெடுத்தலின், 3வேலனென்றார். என்றது,4கழங்கு வைத்துப் பிள்ளையாரால் வந்ததென முற்கூறிப் பின் வெறியாடுவனென்று ஆடும்முறைமை கூறிற்று.

612. 5அரி கூடு இன் இயம் கறங்க-அரித்தெழும் ஓசையையுடைய 6சல்லி கரடி முதலியவற்றோடேகூடின இனிய ஏனைவாச்சியங்கள் ஒலியா நிற்க,


1. தேவராட்டி-தெய்வமேறப் பெற்றவள் ; "காடுபலி மகிழ வூட்டத், தலைமரபின் வழிவந்த தேவ ராட்டி தலையழைமின் " (பெரிய. கண்ணப்ப. 47)

2. அச்சத்தைச் செய்யுமென்றது தலைவிக்கு அச்சத்தைச் செய்தலைக் குறிப்பித்தபடி; "தலைவி அஞ்சவேண்டியது இருவரும் ஒட்டிக்கூறாமல் தெய்வந்தான் அருளுமென்று கோடலின்" (தொல். களவு. சூ. 24, ந.) என்பதை உணர்க.

3. வேலனென்றும் பெயர்க்காரணம், முருகு. 222-ஆம் அடியின் உரையிலும் இவ்வாறே கூறப்பட்டது.

4. கழங்கு-கழற்கொடிக்காய் ; வேலன்கழங்குவைத்துப் பார்த்தலும் பிறவும், "கட்டினுங் கழங்கினும்வெறியென விருவரும், ஓட்டிய திறத்தாற் செய்திக் கண்ணும்" (தொல். களவு. சூ. 24) என்பதனாலும், அதன் உரையாலும், "பெய்ம்மணன் முற்றங் கவின்பெற வியற்றி, மலைவான் கொண்டசினைஇய வேலன், கழங்கினா னறிகுவ தென்றால்" (ஐங். 248) என்பதனாலும் உணரப்படும்.

5. அரி "அரிக்குரற்றட்டை" (மலைபடு. 9)

6. சல்லி-இது சல்லிகையெனவும் வழங்கும் ; சல்லென்ற ஓசையுடைத்தாதலால் இப்பெயர் பெற்றதென்பர். கரடி-இது கரடிகையெனவும் வழங்கும் ; கரடி கத்தினாற்போலும் ஓசையுடைமையின் இப்பெயர் பெற்ற தென்பர். இவ்விரண்டும் உத்தமக்கருவிகளைச் சார்ந்தவை ; சிலப். 3:27, அடியார்.

பார்க்க.