410

612-4. [நேர்நிறுத்துக், கார்மலர்க் குறிஞ்சி சூடிக் கடம்பின், சீர்மிகு நெடுவேட்பணி :]

கார் மலர் குறிஞ்சி சூடி-கார்காலத்தான் மலரையுடையவாகிய குறிஞ்சியைச் சூடி,

கடம்பின் சீர் மிகு நெடுவேள் நேர் நிறுத்து பேணி-கடம்பு சூடுதலால் அழகுமிகுகின்ற முருகனைச் செவ்விதாகத் தன்மெய்க்கண்ணே நிறுத்தி வழிபடுகையினாலே,

தழூஉ பிணையூஉ-மகளிர் தம்முட்டழுவிக் கைகோத்து,

615. மன்றுதொறும் நின்ற குரவை-மன்றுகடோறும் நின்ற குரவைக் கூத்தும்,

சேரிதொறும்-சேரிகடோறும் நின்ற,

616. உரையும் -புனைந்துரைகளும்,

பாட்டும்-பாட்டுக்களும்,

ஆட்டும்-பலவகைப்பட்ட கூத்துக்களும்,

விரைஇ-தம்மிற் கலக்கையினாலே,

617. வேறு வேறு கம்பலை-வேறுவேறாகிய ஆரவாரம்,

வெறி கொள்பு மயங்கி-ஒழுங்குகொண்டு மயங்கப்பட்டு,

618. பேர் இசை 1நன்னன் 2பெறும் பெயர் நன்னாள்-பெரிய புகழையுடைய நன்னன் கொண்டாடுகின்ற பிறந்தநாளிடத்து,

அவன்பெயரை அந்நாள் பெறுதலின், பெயரைப்பெற்ற நன்னாளென்றார்.

619. சேரி விழவின் ஆர்ப்பு எழுந்தாங்கு-சேரிகளிலுள்ளார் கொண்டாடுகின்ற விழாவாலே ஆரவாரமெழுந்தாற்போல,

620. முந்தை யாமம் சென்ற பின்றை-முற்பட்டசாமம் நடந்த பின்பு,

கொண்டிமகளிர் (583) பொய்தலயரப் (589) பாசிழைமகளிர் (579) வீழ்துணைதழீஇ (561) நாணுக்கொள (558) மறவர் (596) மகிழ்சிறந்து திரிதரக் (599) கடுஞ்சூன்மகளிர் கைதொழுது (609) மடுப்ப ஒருசார் (610) நெடுவேட் பேணுகையினாலே (614) மன்றுதொறுநின்ற குரவையும் சேரிதொறுநின்ற (615) உரையும் பாட்டும் ஆட்டும் விரவுகையினாலே (616) வேறுவேறுபட்ட கம்பலை (617) சேரிவிழவின் ஆர்ப்பெழுந்தாங்கு (619) வெறிகொள்பு மயங்கப்பட்டு (617) முந்தையாமஞ் சென்றபின்றை (620) எனக்கூட்டுக.

ஒருசார் (610) விரைஇ (616) என்க.


1நன்னன்-ஒரு குறுநிலமன்னன்.

2சில பிரதிகளில், ‘பெரும்பெயர் நன்னாள்' என்று இருந்தது.